ஜூலை மாதத்தில் அடிப்படைப் பணவீக்கம் 2%ஆக அதிகரிப்பு

ஜூலை மாதத்தில் அடிப்படைப் பணவீக்கம் 2%ஆக அதிகரிப்பு

2 mins read
5c62121e-f715-42c9-8e0d-b4f574afbcb8
ஜூலை மாத அடிப்படைப் பணவீக்கம் 2 விழுக்காடாக அதிகரித்தது என்று புள்ளிவிவரத் துறை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) வெளியிட்ட அதிகாரபூர்வத் தரவுகள் தெரிவித்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் சேவைக் கட்டணங்கள், உணவு விலைகள், பயனீட்டுக் கட்டணங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்ததன் காரணமாக ஜூலை மாதத்தில் நாட்டின் அடிப்படைப் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர்ப் புள்ளிவிவரத் துறை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) வெளியிட்ட அதிகாரபூர்வத் தரவுகள் அதைத் தெரிவித்தன.

அடிப்படைப் பணவீக்கம் என்பது தனியார்ப் போக்குவரத்து, தங்குமிடச் செலவுகளைத் தவிர்த்து குடும்பச் செலவுகளைப் பிரதிபலிக்கிறது. சிங்கப்பூரில் ஜூலை மாதம் அது 2 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது. ஒப்புநோக்க, ஜூன் மாதத்தில் அது 1.6 விழுக்காடாக இருந்தது. ஜூலை மாதப் பணவீக்க விகிதம் 2024 அக்டோபருக்குப் பிந்தைய அதிவேக உயர்வாகும். இருப்பினும், புளூம்பெர்க் ஆய்வின் சராசரிக் கணிப்பான 2.2 விழுக்காட்டைவிட அது குறைவு.

தங்குமிடப் பணவீக்கமும் அடிப்படைப் பணவீக்கமும் அதிகரித்ததை அடுத்து, நாட்டின் ஒட்டுமொத்தப் பணவீக்கம் ஜூலையில் 2.2 விழுக்காடானது. ஜூன் மாதத்தில் 1.9 விழுக்காடாக இருந்த ஒட்டுமொத்தப் பணவீக்கம், தங்குமிடக் கட்டணங்கள் 0.8 விழுக்காடு வரை உயர்வடைந்ததால் அதிகரித்தது.

ஜூன் மாதத்தில் 2.9 விழுக்காடு சரிவைக் கண்ட மின்சார, எரிவாயு விலைகள், ஜூலையில் 8.7 விழுக்காடு வரை உயர்ந்தன. ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்படுத்தப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வே இதற்கு முக்கியக் காரணம் எனச் சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில்துறை அமைச்சும் திங்கட்கிழமை வெளியிட்ட தங்களது கூட்டறிக்கையில் தெரிவித்தன.

உயர்ந்துள்ள உலகளாவிய எரிசக்தி விலைகள், சந்தையில் எண்ணெய் விலைகளின் ஏற்ற இறக்கம், மோசமான வானிலை போன்றவற்றின் காரணமாக உணவுப் பொருள்களின் இறக்குமதி விலை மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உணவுப் பணவீக்கம் ஜூலையில் 2.2 விழுக்காடாகவும் சேவைப் பணவீக்கம் 1.7 விழுக்காடாகவும் அதிகரித்தன. விமானக் கட்டணங்கள் மற்றும் போக்குவரத்துச் சேவைகளின் விலை உயர்வே சேவைப் பணவீக்கத்திற்கு முக்கியக் காரணம். அதேவேளையில், தனியார்ப் போக்குவரத்துப் பணவீக்கம் 8 விழுக்காடாகவும் சில்லறை விற்பனைத் துறையில் பணவீக்கம் 1.4 விழுக்காடாகவும் குறைந்தன.

2026ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த மற்றும் அடிப்படைப் பணவீக்கம் சராசரியாக 1.5 முதல் 2.5 விழுக்காடாக இருக்கும் என்ற முந்தைய முன்னுரைப்பில் மாற்றமில்லை என்று ஆணையமும் அமைச்சும் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்
பணவீக்கம்மின்கட்டணம்எரிபொருள்