கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர் ஒருவர் கடிதங்களின்மீது துப்பியதாகப் பரவும் ஒலிப்பதிவு தகவலுக்கு சிங்போஸ்ட் மறுப்பு

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர் ஒருவர் கடிதங்களின்மீது துப்பியதாகப் பரவும் ஒலிப்பதிவு தகவலுக்கு சிங்போஸ்ட் மறுப்பு

2 mins read
0efa15bd-dbb1-4787-8fba-d44e176d1a07
சிங்போஸ்டின் கடிதங்களைக் கையாளும் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் கையுறைகள், இயர்ஃபோன்கள், முகக்கவசங்கள் போன்றவற்றைப் பணி நேரத்தில் பயன்படுத்துவதாகவும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அவர்கள் உள்சுற்று கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட அஞ்சல் துறை ஊழியர் ஒருவர் கடிதங்களின் மீது உமிழ்நீரைத் துப்பியதாக வாட்ஸ்அப்பில் பரவும் ஒலிப்பதிவு செய்தியில் உண்மையில்லை என்று சிங்போஸ்ட் பேச்சாளர் இன்று (மார்ச் 28) தெரிவித்தார்.

இந்த ஒலிப்பதிவு செய்தி மலேசியாவிலிருந்து பரவுவதாகக் குறிப்பிட்ட அந்தப் பேச்சாளர், "சுங்கை புலோ மருத்துவமனையின் கொவிட்-19 குழுவின் தலைவர் டாக்டர் கிரிஸ்டஃபர் லீ," என்பவரிடமிருந்து அந்தத் தகவல் வெளியாவதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது என்றார்.

கொவிட்-19 தொற்றிய அஞ்சல்துறை ஊழியர் ஒருவர் கடிதங்களின்மீது உமிழ்நீரைத் துப்பியது தொடர்பான ஒரு தகவலைப் பார்த்ததாகவும் கடிதங்களைப் பிரிப்பதற்கு முன்பு அவற்றை குறைந்தபட்சம் ஒரு நாளைக்காவது தொடாமல் வைத்து பின்னர் பிரிக்குமாறு அந்த ஒலிப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

"சிங்கப்பூரைப் பொறுத்தவரை இது முற்றிலும் பொய்யானது. சிங்கப்பூர் உட்பட, உலகம் முழுவதும் இந்த ஒலிப்பதிவு வலம் வருகிறது. மக்களிடையே பதற்றத்தையும் நாட்டின் அத்தியாவசியச் சேவைகளில் ஒன்றான தேசிய அஞ்சல் சேவைகளின் மீது நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தக்கூடியது இந்தப் பதிவு," என்றும் சிங்போஸ்ட் குறிப்பிட்டது.

இந்த ஒலிப்பதிவு தகவலில் உண்மையில்லை என்று மலேசியாவின் சுகாதார அமைச்சு, பிரதமர் அலுவலகம் ஆகியவை ஏற்கெனவே தெரிவித்துள்ளன என்றும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

அந்த ஒலிப்பதிவைச் செய்ததாகக் கூறப்படும் மருத்துவர், அத்தகைய செயலைச் செய்யவில்லை என்று முறைப்படி தெரிவித்துள்ளார்.

உடல் வெப்பநிலையைக் கண்காணித்தல், சுகாதார அறிவிப்பு, குழுக்களாகப் பிரிந்து பணியாற்றுவது, பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பது, இடைவிடாத துப்புரவு என பாதுகாப்பான நடைமுறைகளை சிங்போஸ்ட் ஊழியர்கள் கண்டிப்பாகப் பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சிங்போஸ்டின் கடிதங்களைக் கையாளும் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் கையுறைகள், இயர்ஃபோன்கள், முகக்கவசங்கள் போன்றவற்றைப் பணி நேரத்தில் பயன்படுத்துவதாகவும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அவர்கள் உள்சுற்று கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

"இந்தச் சிரமமான காலகட்டத்தில் கடிதம், அஞ்சல் பொருள்கள் பொதுமக்களுக்கு அபாயத்தை விளைவிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை நாங்கள் அனைத்துலக அளவிலான அஞ்சல் நிறுவனங்களுடன் இணைந்து வலியுறுத்துகிறோம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்