சிங்கப்பூர் நிறுவனங்கள் தினமும் சந்திக்கும் சவால்களை தொழில்நுட்பம் மூலம் தீர்த்துவைக்கவும் நீடித்த நிலைத்தன்மையில் அவை செயல்படவும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) மற்றும் அலிபாபா நிறுவனம் இணைந்து புதிய முயற்சியில் களமிறங்கியுள்ளன.
கிட்டத்தட்ட 200 விஞ்ஞானிகள், பொறியாளர்களைக் கொண்ட குழுவை அமைக்க என்டியுவும் அலிபாபாவும் திட்டமிட்டுள்ளன.
குழுவில் உள்ளவர்கள் பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவராக இருப்பார்கள்.
‘ஏஞ்சல்’ என்று அழைக்கப்படும் இந்த ‘கார்ப்பரேட் லேப்’ திட்டத்தின் நோக்கம் பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ளவர்களின் தொழில் ரீதியான எண்ணங்களை புரிந்துகொண்டு ஒற்றுமையாக இணைந்து புதிய வழிமுறைகளை ஆராய்வது.
இந்தத் திட்டத்தை செப்டம்பர் 12ஆம் தேதி துணைப் பிரதமரும் தேசிய ஆராய்ச்சி அறநிறுவனத்தின் தலைவருமான ஹெங் சுவீ கியட் தொடங்கி வைத்தார்.
‘ஏஞ்சல்’ திட்டத்திற்கு தேசிய ஆராய்ச்சி அறநிறுவனமும் உதவிகளை வழங்குகிறது.
சிங்கப்பூரின் ஆய்வு, புத்தாக்கம், நிறுவன சுற்றுச்சூழல் உள்ளிட்டவைக்கு ‘கார்ப்பரேட் லேப்’ போன்ற திட்டங்கள் முக்கியமானது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்,
ஒரே தொழிலில் உள்ள பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் ஒன்றாக செயல்படும் போது புதிய யோசனைகள் பிறக்கும். அது அந்தத் தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல உதவும் என்றார் திரு ஹெங் சுவீ கியட்.
தொடர்புடைய செய்திகள்
செயற்கை நுண்ணறிவும் நீடித்த நிலைத்தன்மையும் மிக முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன. அவற்றில் முன்னேற இந்தத் திட்டங்கள் உதவும் என்றார் அவர்.
கரிமப் பயன்பாட்டைக் குறைப்பது, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் செயல்படுவது, சுகாதார துறையிலும் மருவத்துவத்திலும் முன்னேறுவது போன்றவை இந்த ‘ஏஞ்சல்’ திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
5 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம் செயல்படும் என்றும் அவை 10 பிரிவுகளில் கவனம் செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

