தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லிட்டில் இந்தியாவில் குப்பை, விதிமீறல்: 12 பேருக்கு சீர்திருத்தப் பணி தண்டனை

3 mins read
79bb589f-61dd-4bdc-a229-771605940eb0
லிட்டில் இந்தியாவில் குப்பை போட்டதற்காக சீர்திருத்தப் பணி ஆணையை நிறைவேற்றியவர்களில் ஒருவர். - படம்: செய்யது இப்ராகிம்
multi-img1 of 3

லிட்டில் இந்தியாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமையன்று, மக்கள் அலைமோதும் வேளையில், குப்பை போட்டதற்கான சீர்திருத்தப் பணி ஆணை நிறைவேற்றப்பட்டது.

குப்பை போட்டதற்காகவும் சாப்பிட்ட தட்டு, பானக் குவளைகளை மேசையில் அப்படியே விட்டுச் சென்றதற்காகவும் பிடிபட்ட 12 பேர் காலை 10 முதல் பிற்பகல் 1 மணிவரை பொதுமக்களின் முன்னிலையில் சீர்திருத்தப் பணி ஆணையை நிறைவேற்றினர்.

அவர்கள் சந்தர் சாலை, பஃபளோ சாலை, தேக்கா நிலையம், கிளாங் லேன் ஆகிய இடங்களில் தரையில் கிடந்த குப்பைகளை எடுத்துக் குப்பைப் பைகளில் போட்டனர்.

இதற்கு முன், மே மாதம் வார நாள் காலையில் இதுபோல் சிலர் சீர்திருத்தப் பணி ஆணையை நிறைவேற்றினர்.

தேக்கா நிலையத்தில் சீர்திருத்தப் பணி ஆணையை நிறைவேற்றும் ஒருவர்.
தேக்கா நிலையத்தில் சீர்திருத்தப் பணி ஆணையை நிறைவேற்றும் ஒருவர். - படம்: செய்யது இப்ராகிம்

அவர்களைப் பார்த்து அதிக மக்கள் குப்பை போடாமலிருப்பர் என்பதற்காகவே ஞாயிற்றுக்கிழமையன்று லிட்டில் இந்தியாவில் இது நடைபெறுவதாகக் கூறினார், பார்வையிட வந்திருந்த வர்த்தக, தொழில்; தேசிய வளர்ச்சி துணை அமைச்சரும் தஞ்சோங் பகார் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆல்வின் டான்.

அண்மையக் காலத்தில் லிட்டில் இந்தியா இன்னும் தூய்மை அடைந்துள்ளதைக் காண முடிவதாக அவர் கூறினார். லிட்டில் இந்தியா உட்பட, தீவு முழுவதும் குப்பை போட்ட குற்றங்களுக்காகப் பிடிபட்டோர் லிட்டில் இந்தியாவில் தம் சீர்திருத்தப் பணி ஆணையை நிறைவேற்றினர்.

“லிட்டில் இந்தியாவிலேயே குப்பை போட்டவர்கள் இயன்றவரை இங்கேயே தம் சீர்திருத்தப் பணி ஆணையை நிறைவேற்றும்படி நான் தேசிய சுற்றுப்புற வாரியத்தைக் கேட்டுக்கொண்டுள்ளேன்,” என்றார் துணை அமைச்சர் டான்.

தண்டனை ஒருபுறம், தூண்டுகோல் மறுபுறம்

“கூடுதல் குப்பைத் தொட்டிகளை லிட்டில் இந்தியாவில் வைத்துள்ளோம்; ஈராண்டுகளுக்கு முன்பு தேக்கா நிலையத்தின் நுழைவாயில் முன்னால் இருந்த குப்பைத் தொட்டிகளை ஓர் ஓரத்துக்கு நகர்த்தினோம். புகைபிடிக்கும் இடத்தைக் குறிக்க மஞ்சள் கட்டம் வரைந்தோம்.

“வாரியத்தின் தொண்டூழியர்க் குழு, ‘அவர் மைக்ரண்ட் கெஸ்ட்ஸ்’ (Our Migrant Guests) செயற்குழு, லிட்டில் இந்தியா தேக்கா பணிக்குழு, ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் ஏஸ், என பல குழுக்களும் இணைந்து மக்களைக் குப்பை போடாமல் இருக்க நினைவூட்டுகின்றன. குப்பை பொறுக்கும் சமூக நிகழ்வுகளில் சமூகத்தினரும் லிட்டில் இந்தியாவைச் சுத்தப்படுத்துகின்றனர்,” என்றார் துணை அமைச்சர் டான்.

குப்பைப் போடுவோரைப் பிடிக்கக் கூடுதல் உத்திகள்

குப்பை போடுவோரைப் பிடிக்க தேக்கா நிலையத்தில் வாரியம் மூன்று கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 1 முதல் இரவு 7 மணிவரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எச்சரிக்கைகளும் தேக்கா நிலையத்தில் ஒலிக்கின்றன. எனினும், கூட்ட இரைச்சலால் அந்த எச்சரிக்கை ஒலி எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்றார் திரு டான்.

ஒலிபெருக்கிச் சத்தம் தொந்தரவளிப்பதாகச் சிலர் கூறியுள்ளதால், அவற்றின் ஒலி குறைக்கப்பட்டுள்ளது.

“எதிர்காலத்தில், தேக்கா நிலையத்தில் ஆங்காங்கே திரைகளை வைத்து, சீர்திருத்தப் பணி ஆணை நிறைவேற்றப்படுவதை அவற்றில் காட்டுவது பற்றிச் சிந்தித்து வருகிறோம். கூடுதல் கண்காணிப்புக் கருவிகளை வைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது,” என்றார் அவர்.

லிட்டில் இந்தியாவில் புறாக்களுக்குத் தீனி போட வேண்டாம் என்றும் வலியுறுத்தினார் துணை அமைச்சர் டான். அப்படி செய்வோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என அவர் வலியுறுத்தினார்.

சாப்பிட்ட தட்டுகள், பானங்களை அப்படியே மேசையில் விட்டுவிட்டுச் செல்பவர்களுக்கு முதல் முறை எழுத்துவடிவிலான எச்சரிக்கை வழங்கப்படுகிறது. திருந்தாமல் மறுபடியும் குற்றம் புரிபவர்களுக்கு அபராதம், சீர்திருத்தப் பணி ஆணை முதலானவை வழங்கப்படுகின்றன.

தரையில் குப்பை போடுவோருக்கு முதன்முறை $300 அபராதம் விதிக்கப்படுகிறது. மறுபடியும் குற்றம் புரிவோருக்கு நீதிமன்றத்தில் அபராதமும் சீர்திருத்தப் பணி ஆணையும் விதிக்கப்படலாம்.

சீர்திருத்தப் பணி ஆணை விதிக்கப்படுவோர், பொது இடங்களில் மூன்று மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரைத் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்புச் சொற்கள்