தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேக்கா நிலையத்தில் சீர்திருத்தப் பணி ஆணைகள் நிறைவேற்றம்

2 mins read
47ddc56d-0cec-474d-ae33-ff7731d622a3
தேக்கா நிலையத்தில் வியாழக்கிழமை (மே 15) காலையில் சீர்திருத்தப் பணி ஆணைகளை நிறைவேற்றியவர்கள். - படம்: த.கவி
multi-img1 of 3

தேக்கா நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் குப்பை போட்டதற்கும் உணவுண்ட பின்னர் தட்டையும் பானத்தையும் அப்படியே மேசையில் விட்டுச்சென்றதற்கும் பிடிபட்டோர் தேக்கா நிலையத்தில் வியாழக்கிழமை மே 15ஆம் தேதி காலையில் சீர்திருத்தப் பணி ஆணைகளை (Corrective Work Orders) நிறைவேற்றினர்.

மொத்தம் 15 பேர் தேக்கா நிலையத்தையும் லிட்டில் இந்தியா வட்டாரத்தையும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை தூய்மைப்படுத்தும் பணிகளைச் செய்தனர்.

அவர்களில் சிலர் சிங்கப்பூரர்கள், சிலர் வெளிநாட்டவர்.

மூன்று குழுக்களாகப் பிரிந்து அவர்கள் தேக்கா நிலையம், கிள்ளான் லேன் போன்ற இடங்களில் தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரிகளின் மேற்பார்வையில் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

சீர்திருத்தப் பணி ஆணைகள் விதிக்கப்பட்டோர் கிள்ளான் லேனிலும் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர்.
சீர்திருத்தப் பணி ஆணைகள் விதிக்கப்பட்டோர் கிள்ளான் லேனிலும் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர். - படம்: த.கவி

இடையிடையே ஓய்வெடுக்கவும் தண்ணீர் குடிக்கவும் இடைவேளைகள் வழங்கப்பட்டன.

“அந்த 15 பேரும் சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் மீண்டும் குப்பை போட்டதற்காகப் பிடிபட்டனர். உயரத்திலிருந்து குப்பை போட்ட குற்றமும் அதில் அடங்கும். உயரத்திலிருந்து குப்பை போட்டோர்மீது நேரடியாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்,” என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

அந்த 15 பேரும் சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் மீண்டும் குப்பை போட்டதற்காகப் பிடிபட்டனர் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
அந்த 15 பேரும் சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் மீண்டும் குப்பை போட்டதற்காகப் பிடிபட்டனர் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது. - படம்: த.கவி

குப்பை போடுவோரைக் கண்காணிக்க பிப்ரவரி மாதத்திலிருந்து தேக்கா நிலையத்தில் கண்காணிப்புப் படக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அமலாக்க அதிகாரிகளும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தேக்கா நிலையத்தில் தூய்மையை வலியுறுத்த ஞாயிறுதோறும் பிற்பகல் 1 முதல் இரவு 7 மணிவரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை பொது அறிவிப்பும் ஒலிபரப்பப்படுகிறது.

இதையடுத்து, நிலைமை மேம்பட்டுள்ளதாகக் கூறினர் தேக்கா நிலையத்தின் துப்புரவுப் பணியாளர்கள். “வார நாள்களில் இப்போது அதிகமானோர் தாங்கள் சாப்பிட்ட தட்டுகளை முறைப்படி அப்புறப்படுத்துகின்றனர். ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறைகளிலும் பலரும் மது அருந்திவிட்டு பானக்கலன்களை அப்படியேதான் விட்டுச் செல்கின்றனர்,” என்றார் துப்புரவுப் பணியாளர் ஒருவர்.

சென்ற ஆண்டு 800 பேருக்குச் சீர்திருத்தப் பணி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. துப்புரவாளர்கள் சந்திக்கும் சவால்களைக் குப்பை போடுவோருக்கு உணர்த்துவதே அவற்றின் நோக்கம்.

சென்ற ஆண்டு 800 பேருக்குச் சீர்திருத்தப் பணி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.
சென்ற ஆண்டு 800 பேருக்குச் சீர்திருத்தப் பணி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. - படம்: த.கவி

தேசியச் சுற்றுப்புற வாரிய விதிமுறைகளின்படி, முதன்முறை குப்பை போடுவோருக்கு $300 அபராதம் விதிக்கப்படும். அதே குற்றத்திற்காக மீண்டும் பிடிபடுவோர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

சாப்பிட்ட தட்டையோ பானக்கலனையோ மேசையில் விட்டுச்சென்றதற்காக முதன்முறை பிடிபடுவோருக்கு எழுத்துபூர்வ எச்சரிக்கை விடுக்கப்படும். இரண்டாம் முறை பிடிபடுவோருக்கு $300 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அதே குற்றமிழைப்போர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

சாப்பிட்ட தட்டுகளையும் பானக்கலன்களையும் முறையான இடத்தில் திரும்ப வைப்பது வாடிக்கையாளர்களின் கடமை.
சாப்பிட்ட தட்டுகளையும் பானக்கலன்களையும் முறையான இடத்தில் திரும்ப வைப்பது வாடிக்கையாளர்களின் கடமை. - படம்: த.கவி

முதன்முறை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவோருக்கு அதிகபட்சம் $2,000 அபராதமும் சீர்திருத்தப் பணி ஆணையும் விதிக்கப்படலாம். இரண்டாம் முறை அதே குற்றம் புரிந்தால் அதிகபட்சம் $4,000 அபராதமும் அதன்பின்னரும் அக்குற்றத்திற்காகப் பிடிபட்டால் அதிகபட்சம் $10,000 அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்