குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணைய அதிகாரியுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஆடவர் இருவர்மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த அந்த இருவரில் ஒருவர், 21 வயது பரத். மற்றவர், 29 வயது ஆர்யா மோனு.
இருவரும் குறுகிய கால அனுமதி அட்டை விண்ணப்பத்திற்காக ஆணைய அதிகாரி கண்ணன் மோரிஸ் ராஜகோபால் ஜெயராமின் உதவியை நாடியதாகக் கூறப்பட்டது.
சிங்கப்பூரரான 55 வயது கண்ணனுக்கு லஞ்சமாக அவர்கள் பாலியல் சேவை வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட கண்ணனுக்கு இதற்கு முன்னர் 22 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மூன்று குற்றச்சாட்டுகளும் ஓர் ஆடவர் தொடர்புடையவை.
வேறு ஆடவர் மூவருடன் சம்பந்தப்பட்ட அத்தகைய மேலும் மூன்று குற்றச்சாட்டுகளும் தீர்ப்பின்போது கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
கண்ணன் 2023ஆம் ஆண்டு ஏப்ரல்முதல் வேலையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அவர்மீது ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக ஆணையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆர்யா, அடுத்த மாதம் 30ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது $30,000 பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தடுத்துவைக்கப்பட்டுள்ள பரத்திடம் அடுத்த மாதம் 2ஆம் தேதி வழக்கிற்கு முந்திய கலந்துரையாடல் நடைபெறும்.
குற்றம் புரிந்தவருக்கு ஒவ்வோர் ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஐந்து ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையோ $100,000 அபராதமோ விதிக்கப்படக்கூடும்.