ஊழல் புகார்கள், வழக்குகள் 2024ல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்தன

2 mins read
c14c04ca-4f30-405e-9ef7-8e7fa378ac23
புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்த குற்றங்களுக்காக 2024ல் மொத்தம் 133 பேர்மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 2024ல் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு 2024ல் ஊழல் தொடர்பான 177 புகார்களைப் பெற்றது. அவற்றில் 75 புகார்கள் விசாரணைக்காகப் பதிவு செய்யப்பட்டன என்று புதன்கிழமை (மே 28) தனது வருடாந்திர புள்ளிவிவரங்களை வெளியிட்டபோது புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது. ஒப்புநோக்க, 2023ல் 215 புகார்களும் 81 வழக்குகளும் 2016ல் 447 புகார்களும் 118 வழக்குகளும் பதிவாகின.

2024ல் தனக்குக் கிடைத்த 177 புகார்களில் 61 புகார்கள் பெயர் தெரியாதவர்களிடமிருந்து கிடைத்தவை என்று புலனாய்வுப் பிரிவு கூறியது.

புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்த குற்றங்களுக்காக 2024ல் மொத்தம் 133 பேர்மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

2024ல் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு வழக்குகளின் குற்றத் தீர்ப்பு விகிதம் 97 விழுக்காடாக இருந்தது. நான்கு பேர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர், மூன்று வழக்குகள் மேல்முறையீட்டு விசாரணைக்காக நிலுவையில் இருந்தன.

2024ல் ஊழல் வழக்குகள் குறைவான எண்ணிக்கையில் இருந்தபோதிலும், அண்மையில் உருவெடுத்த முக்கியமான ஊழல் வழக்குகள், சிங்கப்பூர் மெத்தனமாக இருந்துவிட முடியாது என்பதைக் காட்டுகின்றன என்று புலனாய்வுப் பிரிவு கூறியது.

பொதுத் துறை ஊழல் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக இருந்தது. விசாரணைக்காக பதிவுசெய்யப்பட்ட 75 வழக்குகளில் ஏழு வழக்குகளுக்கு மட்டுமே இவை பங்கு வகித்தன.

எஞ்சிய 68 வழக்குகள் தனியார் துறையைச் சேர்ந்தவை. இவற்றில் 12 வழக்குகளில் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், தேசிய சுற்றுப்புற வாரியம், சிங்கப்பூர் காவல்துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள், தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் வழங்கிய லஞ்சப் பணத்தைப் பெற மறுத்துவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்