ஹியுண்டாய் எஞ்சினியரிங் & கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் ஊழியர் அறுவர்மீது லஞ்சம் பெற்றதாகவோ பெற முயற்சி செய்ததாகவோ வெள்ளிக்கிழமை (ஜூன் 12) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
பாதுகாப்பற்ற வேலை நடைமுறைகள் தொடர்பில் அவர்கள் அந்தத் தவறுகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் 29லிருந்து 53 வயதுக்கு உட்பட்டவர்கள். ஊழல் தடுப்புச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின்கீழ் அவர்கள்மீது பல்வேறு குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஆக அதிக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்
குற்றஞ்சாட்டப்பட்ட அந்த ஆடவர்கள் அறுவரில் ஒருவரான ஷஹீன் எனும் 32 வயது பங்ளாதேஷ் ஊழியர்மீது ஆக அதிகமாக 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஹியுண்டாய் நிறுவனத்தின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியான அவர், லேப்ரடோர் வில்லா ரோட் திட்டத்துக்கான பணிகள் தொடர்பில், துணைக் குத்தகை நிறுவனங்களில் அதே பொறுப்பில் இருந்த் சிலரிடமிருந்து லஞ்சமாக 6,200 வெள்ளியைப் பெற்றதாகவோ பெற முயன்றதாகவோ நம்பப்படுகிறது.
தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய நிலத்தடி துணை மின்நிலையத்தை உள்ளடக்கும் லேப்ரடோர் வில்லா ரோட் திட்டத்துக்கான பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களில் ஆக முக்கியமானது ஹியுண்டாய் எஞ்சினியரிங் & கன்ஸ்ட்ரக்ஷன். அருகிலுள்ள அலெக்சாண்டிரா, கிளமென்டி, கெப்பல், பாசிர் பாஞ்சாங், சயின்ஸ் பார்க் வட்டாரம் ஆகியவற்றுக்கு லேப்ரடோர் துணை மின்நிலையம் மின்சாரத்தை விநியோகிக்கும்.
இந்த விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மற்றவர்கள், பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்களான 42 வயது பிஸ்வாஸ் உஸால், 33 வயது ஹுசைன் மித்து முகம்மது அரிஃப், 34 வயது உதின் முகம்மது மெஸ்பா, பாதுகாப்பு மேற்பார்வையாளரான 29 வயது பிஸ்வாஸ் பிரதிப் சந்திரா, பாதுகாப்பு மேலாளரான 53 வயது சியாவ் ஹங் வீ ஆகியோர் ஆவர்.
இவர்களில் சியாவ் சிங்கப்பூரர். மற்றவர்கள் பங்ளாதேஷைச் சேர்ந்தவர்கள்.
விதிக்கப்படக்கூடிய தண்டனை
இந்த அறுவரின் வழக்குகளும் வரும் ஜூலை மாதம் மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வரும். ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 100,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது ஐந்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

