ஊழல்: நான்கு ஆண்டுகள் தலைமறைவுக்குப் பின் சிங்கப்பூரர் மலேசியாவில் கைது

ஊழல்: நான்கு ஆண்டுகள் தலைமறைவுக்குப் பின் சிங்கப்பூரர் மலேசியாவில் கைது

படம்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

24 Nov 2026 - 6:51 pm

1 mins read

புத்ராஜெயா: சிங்கப்பூரின் லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவால் தேடப்பட்டு வந்த சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நான்கு ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த 30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஆடவர் சுயதொழில் செய்பவர்.

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) இரவு 7 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் உளவுப் பிரிவு, ஜோகூர் மாநிலப் பிரிவு அதிகாரிகள், மலேசியக் குடிநுழைவுத் துறை, ஜோகூர் எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் அவர் பிடிபட்டார்.

சிங்கப்பூரின் லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள், பரஸ்பர சட்ட உதவிப் பிரிவு ஆகியவற்றின் அனைத்துலக அமைப்புகளுக்கிடையிலான ஒத்துழைப்பின்கீழ், சந்தேக நபர் திங்கட்கிழமை (நவம்பர் 23) சிங்கப்பூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

“சிங்கப்பூரில் நிகழ்ந்த ஊழல் வழக்கு ஒன்றில் அந்த ஆடவர்க்குத் தொடர்பிருப்பதும், அவர் சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழைந்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இன்றி மலேசியாவில் தங்கியிருந்ததன் தொடர்பில் தம்மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, மலேசிய அமலாக்க அதிகாரிகளுக்கு அவர் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் நம்பப்படுகிறது,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்