செலவு செய்வதில் சிங்கப்பூர்ப் பயணிகள் மிகுந்த கவனம்: ஆய்வு

செலவு செய்வதில் சிங்கப்பூர்ப் பயணிகள் மிகுந்த கவனம்: ஆய்வு

2 mins read
1cab70de-6ed8-4da9-808f-b935b5d85cd0
பயணச் செலவுகள் அதிகரிப்பது குறித்துச் சிங்கப்பூர்ப் பயணிகள் அதிகக் கவனம் செலுத்தினாலும், அவர்கள் பயணங்களைக் குறைத்துக்கொள்ளவில்லை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் செலவு குறித்து அதிகக் கவனம் செலுத்துபவர்களாகச் சிங்கப்பூர் பயணிகள் உள்ளனர்.

பயண முன்பதிவு நிறுவனமான ‘க்ளுக்’ (Klook), நடத்திய ‘டிராவல் பல்ஸ் 2026’ ஆய்வு விவரங்கள் புதன்கிழமை (ஜூலை 8) வெளியிடப்பட்டது.

ஆய்வில் சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனீசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் கலந்துகொண்டனர்.

ஆய்வில், 71 விழுக்காட்டுச் சிங்கப்பூரர்கள், சுற்றுப் பயணம் செய்ய பண நெருக்கடியே மிகப்பெரிய தடையாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். இருந்தாலும், 10ல் எட்டுப் பேர் தங்களின் பயணங்களைத் தொடர்ந்து மேற்கொள்வதாகக் கூறியுள்ளனர்.

பயணச் செலவுகளில் சிங்கப்பூர்ப் பயணிகள் அதிகக் கவனம் செலுத்தினாலும், அவர்கள் தங்களின் பயணங்களைக் குறைத்து கொள்ளவில்லை.

புதிய சூழலுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொண்டு, வெளிநாடுகளில் தங்களின் பணத்தைச் சிறப்பான முறையில் செலவிடும் வழிகளைச் சிங்கப்பூர் பயணிகள் கண்டறிகின்றனர் என்று ஆய்வு சுட்டியது.

47 விழுக்காடு சிங்கப்பூர்ப் பயணிகள் தங்கள் பயணத்திற்கு முன்பு சலுகைகளையும் தள்ளுபடிகளையும் தேடுகிறார்கள்.

அதேபோல் 46 விழுக்காட்டினர் மலிவான கட்டணத்தில் முன்பதிவுகளைத் திட்டமிடுகிறார்கள். 31 விழுக்காட்டினர் குறைந்த கட்டணத் தங்குமிடங்களைத் தேர்வு செய்கிறார்கள்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“செலவு குறித்த விழிப்புணர்வால் சிங்கப்பூரர்கள் பயணம் செய்வதை நிறுத்தவில்லை. மாறாகப் பயணம் செய்யும் முறையை மாற்றியிருக்கிறார்கள்,” என்று ‘க்ளுக்’ நிறுவனத்தின் பொது மேலாளர் சாரா வான் தெரிவித்துள்ளார்.

பயணப் பழக்கவழக்கங்கள் மாறினாலும் சிங்கப்பூர்ப் பயணிகளின் முதன்மையான இடங்களாக ஜப்பான், சீனா, வியட்னாம் ஆகிய நாடுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.

ஜப்பான் நாட்டுக்கான பயணத் தேவை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 20 விழுக்காடு அதிகரித்துள்ளது.

குறிப்பாக, ஃபுகுவோகா, நகோயா போன்ற நகரங்களுக்கான பயணத் தேவை முறையே 33 விழுக்காடும் 58 விழுக்காடும் அதிகரித்துள்ளன.

சீனாவின் குவாங்‌‌‌ ஷோ, ஷென்சென், பெய்ஜிங், ஷாங்காய் போன்ற நகரங்கள் தொடர்ந்து பிரபலமாக உள்ளன.

குறிப்புச் சொற்கள்
பயணம்ஆசிய பசிபிக்சுற்றுலா