போக்குவரத்து, பங்காளிகளை உபசரிப்பது, புதிய சகப் பணியாளருக்கு உணவு வாங்கித் தருவது எனப் பல வகையான வேலை சார்ந்த செலவுகளை வேலையிடப் பணியாளர்கள் சந்தித்திருக்கக்கூடும்.
அதற்கான தொகையை நிறுவனத்திடமிருந்து பெறுவதற்குச் செய்யவேண்டிய ஒப்படைப்புப் பதிவுகளை உரிய நேரத்தில் செய்து முடிக்காமல் சிலர் தள்ளிப்போடுகின்றனர். இதனால் அவர்கள், தங்களுக்குரிய பணத்தைத் தாமதமாகப் பெறுகின்றனர் அல்லது பெறுவதே இல்லை.
இளம் ஊழியர்கள் சிலர், வேலையிடம் தங்களைத் தவறாக நினைக்குமோ என்ற எண்ணப்போக்காலும் தாங்கள் பெற வேண்டிய பணத்தைப் பெறத் தயங்குகின்றனர்.
இவ்வாறு தொடர்ந்து செலவு செய்பவர்கள் நன்கு சேமிக்க முடியாமல் காலப்போக்கில் நிதிச் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சிலருக்குக் கடன் வாங்கும் நிலை ஏற்படுவதாகவும் நிதி நிபுணர்கள் கூறுகின்றனர்.
நிதி, கட்டணத் தளமான ஏர்வாலெக்ஸ் (Airwallex), சிறிய, நடுத்தர நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரையிலான வர்த்தகங்களைச் சேர்ந்த 500 ஊழியர்களிடம் இதன் தொடர்பில் ஆய்வு ஒன்றை நடத்தியது.
ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 56 விழுக்காட்டினர், வேலையிடம் தொடர்பான செலவுகளுக்காகத் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து ஆண்டுக்கு 5,000 வெள்ளி வரை (அதாவது மாதத்திற்குச் சுமார் 416.70 வெள்ளி) செலவிடுவதாகக் கண்டறியப்பட்டது.
மேலும் 5 விழுக்காட்டினர், தங்களது வேலை தொடர்பான செலவுகள் ஆண்டுக்கு 20,000 வெள்ளியைத் தாண்டுவதாகவும், இது மாதத்திற்கு ஏறக்குறைய 1,700 வெள்ளிக்குச் சமம் என்றும் தெரிவித்தனர்.
வேலை தொடர்பான செலவுகளைத் திரும்பக் கேட்கத் தயங்கும், அல்லது அவ்வாறு கேட்டால் தாங்கள் கணக்குப் பார்ப்பவர்களாகக் கருதப்படுவோமோ என அஞ்சும் புதிய ஊழியர்கள், தங்கள் பணத்தைத் திரும்பக் கேட்பதற்குப் பயப்படக் கூடாது என்று ஃபைனெக்ஸிஸ் அட்வைசரி (finexis advisory) நிறுவனத்தின் நிர்வாக நிதி ஆலோசகர் திருவாட்டி கிளாடிஸ் டான் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இது குறித்து வெளிப்படையாகப் பேசுவது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“உங்கள் மேலாளரை அணுகி, சில செலவுகளை எப்படி நிர்வகிக்கலாம் என்பது குறித்த உங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இதன் மூலம், அந்த இளையர்கள் கணக்குப் பார்ப்பவர்களாக இல்லாமல், பொறுப்பானவர்களாகப் பார்க்கப்படுவார்கள்,” என்று அவர் விளக்கினார்.


