வாழ்க்கைச் செலவினம், வேலைவாய்ப்பு பற்றி கட்சிகள் விவாதம்

3 mins read
f3d6d06f-806c-42de-a1f1-e72bbd775916
மே 3ஆம் தேதி பொதுத் தேர்தலை முன்னிட்டு கட்சிகள் கொள்கைகள் பற்றிய கருத்துகளை முன்வைத்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர்கள் அதிகம் கவலைப்படும் வாழ்க்கைச் செலவினம், வேலைவாய்ப்புகள், கட்டுப்படியான வீடுகள் உள்ளிட்ட தலைப்புகளில் ஐந்து கட்சிகள் தங்கள் கருத்துகளை மீடியாகார்ப் நடத்திய வட்டமேசை உரையாடலில் முன்வைத்தன.

மக்கள் செயல் கட்சி, பாட்டாளிக் கட்சி, ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி, சீர்த்திருத்த மக்கள் கூட்டணி, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்கள் புவிசார் அரசியல், பொருளியலும் வேலைவாய்ப்புகளும், வாழ்க்கைச் செலவினம் ஆகிய மூன்று தலைப்புகளில் பேசினர்.

பொருள், சேவை வரியை ஒன்பது விழுக்காட்டுக்கு உயர்த்தியிருக்கக்கூடாது என்பது எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கருத்தாக இருந்தது.

அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் கிடைத்த உபரித் தொகையைக் கொண்டு இலவசக் கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, பள்ளி உணவு ஆகியவற்றை வழங்க முடியும் என்று கூறினார் சீர்திருத்த மக்கள் கூட்டணித் தலைமைச் செயலாளர் லிம் டியென். 

“2024ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கிடைத்த உபரித் தொகை $6.4 பில்லியன். பொருள், சேவை வரி மூலம் கிட்டியது $3.5 பில்லியன். 1999ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரையிலான ஒட்டுமொத்த வரவுசெலவுத் திட்ட உபரித் தொகை $40 பில்லியன். அதோடு நிகர முதலீட்டு வருவாய்ப் பங்களிப்பை 10 விழுக்காடு உயர்த்தினால் $5 பில்லியன் கிடைக்கிறது,” என்ற திரு லிம், “எங்கள் கட்சி சொல்வது போல இலவசக் கல்வி, சுகாதாரப் பராமரிப்பு போன்றவற்றைத் தாராளமாக வழங்க முடியும்,” என்றார்.

வெளிநாடுகளிலிருந்து பெரும்பாலான பொருள்களை இறக்குமதி செய்யும் சிங்கப்பூர், பணவீக்கத்தைத் தவிர்க்க முடியாது என்றார் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் சீ ஹொங் டாட்.

“பத்தில் எட்டுக் குடும்பங்களால் மத்திய சேமநிதியைப் பயன்படுத்தி முதல் வீட்டை வாங்க முடிகிறது. அவர்கள் ரொக்கம் செலுத்தத் தேவையில்லை அல்லது குறைவான ரொக்கத்தைத்தான் செலுத்துகின்றனர். பத்தில் ஏழு பேர் மருத்துவச் செலவுகளுக்கு ரொக்கம் செலுத்தத் தேவையில்லை. பத்தில் எட்டுப் பேர் $100க்கும் குறைவாகவே ரொக்கம் செலுத்துகின்றனர்,” என்ற திரு சீ, “பொதுக் கல்விக்கு 90 விழுக்காடு மானியங்கள் வழங்கப்படுகின்றன,” என்றார்.

குடிநுழைவைப் பொறுத்தவரை வெளிநாட்டினருக்கான சிறப்பு அனுமதிச்சீட்டு (S-pass), வேலை அனுமதிச் சீட்டுக்கு (Work Permit) இருப்பதுபோல வேலை அனுமதி அட்டைக்கும் (E-Pass) தீர்வை விதிக்கப்படவேண்டும் என்றார் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் திருவாட்டி ஸ்டெஃபனி டான்.

ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் திரு ரவி ஃபிலமன், வேலையிடங்களில் சிங்கப்பூரர்களுக்கான உரிமைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று கோரினார்.

சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும், அவர்களுக்குத்தான் முதல் வேலைவாய்ப்பு கொடுக்கப்படவேண்டும் என்ற கருத்தை பாட்டாளிக் கட்சியின் திரு மைக்கல் திங் வலியுறுத்தினார்.

அவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய மக்கள் செயல் கட்சியின் திரு சீ, “கட்சி சிங்கப்பூரர்களை அடிப்படையாகக் கொண்டுதான் கொள்கைகளை வடிவமைக்கிறது. அதேவேளை பொருளியல் வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கலாம் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்,” என்றார்.

“கடந்த பத்தாண்டுகளில் எஸ்-பாஸ், ‘இபி’ அட்டை வைத்திருப்போரின் எண்ணிக்கை 38,000ஆக கூடியது. ஆனால், நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களுக்கு 382,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன,” என்றார் திரு சீ.

புவிசார் அரசியலில் சிங்கப்பூரின் வளர்ச்சி, படிப்படியாக முன்னேறும் சம்பள முறை, கட்டுப்படியான விலையில் வீடுகள், சிங்கப்பூர் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற பல அம்சங்களும் வட்டமேசை நிகழ்ச்சியில் அலசி ஆராயப்பட்டன.

குறிப்புச் சொற்கள்