வாகன நிறுத்தத்துக்காக ஒரு நாளுக்கு 65 காசு செலுத்துவதைத் தவிர்த்த 20க்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிளோட்டிகள், இறுதியில் அதைவிட பன்மடங்கு அபராதம் செலுத்த நேரிட்டது.
புளோக் 3025 உபி ரோடு 3ல் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 10) இச்சம்பவம் நிகழ்ந்ததாக சீன நாளிதழான ஷின் மின் தெரிவித்தது.
மதிய உணவு சாப்பிட்ட பிறகு, வாகன நிறுத்துமிடத்துக்குத் திரும்பிய தம் காதலர், அவரின் மோட்டார்சைக்கிளின் சக்கரங்கள் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டறிந்ததாக ஃபேஸ்புக்கில் பயனர் ஒருவர் பதிவிட்டார்.
தம்மைச் சுற்றியிருந்த சில மோட்டார்சைக்கிள்களின் சக்கரங்களும் பூட்டப்பட்டிருந்ததை அந்த ஆடவர் கண்டார்.
தம் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த எண்ணில் தொடர்புகொண்டு அந்த ஆடவர் விசாரித்தார். அக்டோபர் 5ஆம் தேதி வாகன நிறுத்தக் கட்டணம் செலுத்தாமல் அந்த வாகன நிறுத்தத்தைவிட்டு தாம் புறப்பட்டதாகவும் அதனாலேயே மோட்டார்சைக்கிளின் சக்கரங்கள் பூட்டப்பட்டதாகவும் அவரிடம் தெரியப்படுத்தப்பட்டது. பூட்டைத் திறக்க $409 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அக்டோபர் 5ஆம் தேதி முதல் கண்காணிப்புக் கருவிப் பதிவுகளைப் பார்வையிட அந்த ஆடவர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மாறாக, தமது புகாரை நிர்வாகத்திடம் எடுத்துச்செல்ல அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. தம் காதலியை அழைத்துச் செல்ல தாமதம் ஏற்பட விரும்பாததால், பூட்டைத் திறந்துவிட அவர் அபராதத் தொகையைச் செலுத்தினார்.
ஷின் மின் வெளியிட்ட அந்த அபராத ரசீதின் படம், அந்த வாகன நிறுத்துமிடத்தை ‘வில்சன் பார்க்கிங்’ எனும் நிறுவனம் நிர்வகிப்பதைக் காட்டியது.
இந்நிலையில், ஷின் மின்னிடம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) பேசிய மேலும் சிலர், அதற்கு முந்தைய தினம் தங்கள் மோட்டார்சைக்கிள்களின் சக்கரங்களும் பூட்டப்பட்டிருந்ததாகக் கூறினார்.

