காஸா போரின்போது இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையில் இணைந்து போரிட்டவர்களில் சிங்கப்பூரர்கள் இருவரும் அடங்குவர் என்று வெளிநாட்டுச் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையைத் தான் அறிந்துள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
எந்தவொரு சிங்கப்பூரரும் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையின் ஒரு பகுதியாகப் போரிடுகிறார் அல்லது போரிட்டார் என்பதற்கான ஆதாரபூர்வத் தகவல் எதுவும் தற்போது தங்களிடம் இல்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அமைச்சு கூறியது.
பிரிட்டிஷ் புலனாய்வு இதழியல் நிறுவனமான ‘டிகிளாசிஃபைட் யுகே’ பிப்ரவரி 11ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சு பதிலளித்தது.
இஸ்ரேலிய மற்றும் குறைந்தது மற்றொரு நாட்டின் குடியுரிமையைக் கொண்ட 50,000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை வீரர்கள் காஸா போரில் போரிட்டதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை வெளியிட்ட தரவுகள் காட்டுவதாக அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
அந்த அறிக்கையின்படி, அவர்களில் இருவர் சிங்கப்பூர்க் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள்.
ஒருவர், சிங்கப்பூர் மற்றும் இஸ்ரேலியக் குடியுரிமை கொண்டவர் என்றும் மற்றொருவர் சிங்கப்பூர் உட்பட பல நாடுகளின் குடியுரிமை கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிங்கப்பூர்க் குடியுரிமை கொண்டவர்கள் அங்கு என்ன பொறுப்புகளை வகித்தார்கள் அல்லது எவ்வளவு காலம் அந்தப் பொறுப்புகளில் இருந்தார்கள் என்பது குறித்த விவரங்களை அந்த அறிக்கை குறிப்பிடவில்லை.
இந்த விவகாரம் குறித்து ‘அல் ஜசீரா’ செய்தியைச் சுட்டிக்காட்டி உள்துறை அமைச்சின் முன்னாள் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின், புதன்கிழமையன்று (பிப்ரவரி 18) இரவு ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
பிப்ரவரி 18ஆம் தேதியன்று ஃபேஸ்புக் பதிவொன்றில், உள்துறை அமைச்சுக்கான முன்னாள் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின், சிங்கப்பூர்ச் சட்டப்படி குடிமக்களும் நிரந்தரவாசிகளும் வெளிநாடுகளில் ஆயுதம் ஏந்திப் போரிட முடியாது என்பதைக் குறிப்பிட்டார்.
“நமது அதிகாரிகள் இதனை முழுமையாகவும் நேர்மையாகவும் கையாள்வார்கள் என்று நம்புகிறேன். இந்தத் தகவல் துல்லியமானதாக இல்லையென்றால், அது தெளிவுபடுத்தப்படும் என்று நம்புகிறேன். எதுவாக இருந்தாலும், வெளிப்படையான விசாரணை மட்டுமே சிங்கப்பூரின் நேர்மை, ஒருமைப்பாட்டின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைத் தக்கவைக்க உதவும்,” என்றார் அவர்.
இந்த விவகாரம் கவலைக்குரியது என்றும் விளக்கம் தேவை என்றும் அவர் கூறியதையடுத்து இது வெளிச்சத்துக்கு வந்தது.

