தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாடுகள் புதிய வர்த்தக இணைப்புகளை உருவாக்க முடியும்: தர்மன்

2 mins read
8c2b7eff-bd9e-4210-9717-ea1b22a664dc
புளூம்பெர்க்கின் லிசா அப்ரமோவிச் (இடது) வழிநடத்திய கலந்துரையாடலில் பேசிய அதிபர் தர்மன் சண்முகரத்னம் (இடமிருந்து 2வது). உடன் இருப்போர் ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவர் கிறிஸ்டின் லகார்ட், அனைத்துலக பணநிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

அமெரிக்கா விதித்த வரிகள் ஆசியாவிற்கு ஒரு பின்னடைவாக இருந்தாலும், நாடுகள் வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் மீள்தன்மையை வளர்ப்பது பற்றி சிந்திக்கத் தொடங்க வேண்டும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் அக்டோபர் 16 அன்று கூறினார்.

“அமெரிக்க வரிகள் வர்த்தகத்தை மறுசீரமைக்கின்றன என்றால், நாம் வர்த்தகத்தையும் மறுசீரமைக்க வேண்டும்,” என்று மாறிவரும் உலகளாவிய நிலப்பரப்பின் மத்தியில் பொருளியல் கொள்கைகளை வடிவமைப்பது குறித்து வாஷிங்டனில் நடந்த ஒரு கலந்துரையாடலில் அவர் கூறினார்.

அமெரிக்காவிற்கு பணிசார் வருகை மேற்கொண்டுள்ள அதிபர் தர்மன், தற்போதைய சவால்களில் இருந்து நாடுகள் மீள்வதற்கு உதவும் வகையில், 11 பசிபிக் நாடுகளையும் பிரிட்டனையும் ஒன்றிணைக்கும் டிரான்ஸ்-பசிபிக் பங்காளித்துவத்துக்கான விரிவான மற்றும் முன்னேற்ற ஒப்பந்தத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு சாத்தியக்கூறுகளை மேற்கோள் காட்டினார்.

“எது சாத்தியப்படும் என்று யோசித்துப் பாருங்கள். டிரான்ஸ்-பசிபிக் பங்காளித்துவத்துக்கான விரிவான மற்றும் முன்னேற்ற ஒப்பந்தம் அமைப்பும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்கத் தொடங்கினால், அது உலக வர்த்தகத்தில் சுமார் 42 விழுக்காடாகும். ஆசியானும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்கத் தொடங்கினால், அது உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும்,” என்று அவர் கூறினார்.

“ஆசியாவில் வளரும் நாடுகள் மதிப்பு கூட்டலில் தொடர்ந்து முன்னேற அனுமதிக்கும் புதிய வர்த்தக ஏற்பாடுகளை மேற்கொள்வோம். அதுதான் அமெரிக்க வரி நடவடிக்கையின் ஒரு நன்மை. இது வட்டார ஒருங்கிணைப்பைத் தூண்டுகிறது. மேலும் இது வட்டாரங்களுக்கு இடையே இணைப்பைத் தூண்டுகிறது,” என்று திரு தர்மன் கூறினார்.

“சில சிரமங்களைச் சமாளித்து, சில சரிசெய்தல் நடவடிக்கைகளுக்குப் பிறகு, புதிய மீள்தன்மையுடன் நாம் முன்னேறலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.

புளூம்பெர்க்கின் லிசா அப்ரமோவிச் வழிநடத்திய கலந்துரையாடலில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் இக்கருத்துகளை முன்வைத்தார். அவருடன் ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவர் கிறிஸ்டின் லகார்ட், அனைத்துலக பணநிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா ஆகியோரும் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

அனைத்துலக பணநிதியம், அண்மையில் 2025ஆம் ஆண்டில் உலகளாவிய பொருளியல் வளர்ச்சிக்கான அதன் கணிப்பை 3 விழுக்காட்டிலிருந்து 3.2 விழுக்காடாகவும், 2025ஆம் ஆண்டில் ஆசியாவின் வளர்ச்சிக்கான கணிப்பை 3.9 விழுக்காட்டிலிருந்து 4.5 விழுக்காடாகவும் உயர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்