தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் தாம் இதுவரை ஆற்றியுள்ள பணிகளின் அடிப்படையில் குடியிருப்பாளர்களே முடிவுகளைப் பார்த்துக்கொள்வார்கள் என நம்பிக்கையுடன் கூறினார் கல்வி அமைச்சர் சான் சுன் சிங்.
தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் பல்லாண்டுகாலம் சேவையாற்றியுள்ள பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா வேறு தொகுதிக்கு மாறினாலும் அவர் விட்டுச்சென்ற ஆலோசனைகள் தொடர்ந்து தொகுதியின் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் என்றார் அமைச்சர் சான்.
ஏப்ரல் 23ஆம் தேதி பிற்பகல் நடந்த தஞ்சோங் பகார் வேட்பாளர் சந்திப்பில் அவர் இதைக் கூறினார்.
பல்லாண்டுகளாகத் தஞ்சோங் பகார் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள அமைச்சர் இந்திராணி ராஜா, பாசிர் ரிஸ்-சாங்கிக் குழுத்தொகுதியில் இம்முறை வேட்பாளராக நிற்கிறார்.
அது குறித்துக் கூறிய அமைச்சர் சான், “அனைவரும் கடமை அழைக்கும்போது வேறு தொகுதிக்கும் செல்லத் தயாராக இருக்கவேண்டும்,” என்றார்.
பலரும் எதிர்பார்க்காத மற்றொரு மாற்றம், தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சிப் (மசெக) புதுமுகம் ஃபூ சசியாங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது. ஏனெனில், இதற்கு முன்பு அவர் கணிசமான நேரம் பொங்கோலில் காணப்பட்டிருந்தார்.
எனினும், தஞ்சோங் பகார் உட்பட தீவின் மற்ற பகுதிகளுக்கும் சென்றுவந்துள்ளதாகக் கூறினார் திரு சசியாங். அமைச்சர் இந்திராணி தம்முடன் அமர்ந்து, தஞ்சோங் பகார் குறித்து ஆலோசனைகள் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
“நான் மூன்று மகள்களுக்குத் தந்தை. என்னைப் போன்ற இளம் பெற்றோருக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்,” என்றார் ஃபூ சசியாங்.
தொடர்புடைய செய்திகள்
மற்றொரு முக்கிய மாற்றம், முன்பு தஞ்சோங் பகார் தொகுதியைப் பிரதிநிதித்த கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, புதிதாக அமைக்கப்பட்ட குவீன்ஸ்டவுன் தனித்தொகுதியில் களமிறங்குகிறார்.
முன்பு தெலுக் பிளாங்கா நாடாளுமன்ற உறுப்பினரான ரேச்சல் ஓங், தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழுவின் அறிக்கைப்படி அப்பகுதி தஞ்சோங் பகார் குழுத்தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதால் தஞ்சோங் பகார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வர்த்தக, தொழில் மற்றும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சுகளின் துணையமைச்சர் ஆல்வின் டான், சிறுபான்மை இன வேட்பாளர் ஜோன் பெரேரா இருவரும் தஞ்சோங் பகார் குழுத்தொகுதி மசெக அணியில் இடம்பெறுகின்றனர்.
“மசெக நாடு முழுவதும் வேட்பாளர்களைக் களமிறக்குகிறது. நாங்கள் தனிநபர்த் திறன்களை மட்டும் பார்ப்பதில்லை. நிலைத்தன்மையுடன் புதிய கண்ணோட்டங்களையும் இணைத்துள்ளோம். எடுத்துக்காட்டாக, தெலுக் பிளாங்காவில் உள்ள வேறுபட்ட நடைமுறைகளை ரேச்சல் கொண்டுவருவார். ஃபூ சசியாங் வேறு வயதுப் பிரிவைச் சார்ந்தவர். இளம் பெற்றோருடன் பிணைப்பை உண்டாக்குவார்,” என்றார் அமைச்சர் சான்.
எதிர்க்கட்சி சுட்டியவற்றுக்கு விளக்கமளித்த அமைச்சர் சான்
தஞ்சோங் பகாரில் சீர்திருத்த மக்கள் கூட்டணி மசெகவைத் தேர்தல் களத்தில் சந்திக்கவுள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலையடுத்து அளித்த நேர்காணலில், அக்கட்சி உணவுப் பாதுகாப்பு, இலவசக் கல்வி, இலவச மருத்துவம் (குறிப்பாக முதியோருக்கு) போன்றவற்றுக்குக் குரல்கொடுக்கவுள்ளதாகக் கூறியிருந்தது. அதன் வேட்பாளர் ஹான் ஹுவெய் ஹுவெய், “தஞ்சோங் பகாரில் வீடுகளின் விலைகள் மிக உயர்வாக இருப்பதால் முதியோர் பலரும் பிள்ளைகள் தம் அருகில் தங்குவதில்லையென வருத்தப்படுகின்றனர்,” எனச் சுட்டியிருந்தார்.
அது குறித்து அமைச்சர் சான், தஞ்சோங் பகாரில் இன்னும் பல புதிய ‘பிடிஓ’ வீடுகள் முதியோருக்கும் பலதரப்பட்ட குடும்ப வகைகளுக்கும் ஏற்றவாறு வரவுள்ளதாகக் கூறினார்.
“முழக்கவரிகள் சொல்வது மட்டுமல்லாமல், குடியிருப்பாளர்களுடன் இணைந்து எப்படிச் சவால்களைச் சமாளிப்பது, நாம் ஒரு கொள்கையை வைக்கும்போது அதற்குத் தேவையான உழைப்பு என்ன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்,” என்றார் அமைச்சர் சான்.
ராடின் மாஸ் தனித்தொகுதியில் மசெகவின் மெல்வின் யோங் மீண்டும் போட்டியிடவுள்ளார்.
அவருக்கு எதிராக நிற்கும் சுயேச்சை வேட்பாளரான சட்டத்துறைப் பட்டதாரி டேரில் லோ, வேலையை விட்டுவிட்டுத் தேர்தலில் முழுமூச்சாக இறங்கியுள்ளார். தாம் முழுநேர நாடாளுமன்ற உறுப்பினராகச் செயலாற்றினால் மக்களின் தேவைகளை இன்னும் சிறப்பாகப் பூர்த்திசெய்ய முடியும் என்றார் அவர்.
அது குறித்துக் கூறிய அமைச்சர் சான், “சிங்கப்பூரின் அரசியல் கட்டமைப்பில் ஒரு தனிச்சிறப்பு நாம் ஒவ்வொருவரும் மற்றொரு வேலையையும் செய்துகொண்டே நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதே. வெவ்வேறு துறைகளில் பணியாற்றுவதால் சக சிங்கப்பூரர்கள் சந்திக்கும் சவால்களை இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்ளமுடிகிறது,” என்றார்.
குவீன்ஸ்டவுன் சுகாதார வட்டாரம் உட்பட (Health District @ Queenstown) தாம் அறிமுகப்படுத்திவரும் முயற்சிகளைப் பற்றிப் பேசினார் திரு எரிக் சுவா.
“என்யுஎச்எஸ் குழு மூத்தோர் 5,000 பேரை ஆய்வுசெய்துள்ளது. தரவுகளின் அடிப்படையில் சமூக, சுகாதார முயற்சிகளை மேற்கொள்கிறோம். எடுத்துக்காட்டாக, சென்ற டிசம்பர் மாதம் சுகாதார வட்டாரத்துக்கான ‘வளாகத்துக்கு வெளியே உள்ள அலுவலகத்தை’ (satellite office) மார்கரட் டிரைவில் அமைத்தோம்,” என்றார் திரு எரிக் சுவா.
“எப்படி முதலாளி- தொழிலாளர் பங்காளித்துவத்தை வலுப்படுத்தி மூத்தோருக்கான வேலைவாய்ப்புகளைக் கூட்டலாம் என்பதையும் ஆராய்வேன். முதியோருக்கு மாதச் சம்பளம் மட்டுமல்ல, சமூக இணைப்பு, கெளரவம் ஆகியவையும் முக்கியம்,” என்றார் திரு எரிக் சுவா.
மறதிநோய் உடையவர்களுக்கும் வசதி குறைந்தோருக்கும் உணவுப் பாதுகாப்பு தொடர்பாகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் தாம் அறிமுகப்படுத்திய முயற்சிகளையும் அவர் சுட்டினார்.
அவர் சீர்திருத்த மக்கள் கூட்டணியின் மஹபூப் பாட்ஷாவுடன் போட்டியிடுகிறார்.
சென்ற முறையும் ராடின் மாஸ் தனித்தொகுதியில் நின்று வென்ற மெல்வின் யோங், தாம் சென்ற முறை அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகக் கூறினார்.
“நான் கொவிட்-19 காலத்தில் பதவியேற்றபோது வேலைகள், வாழ்வாதாரங்கள்தான் மிகப் பெரியக் கவலையாக இருந்தன. அப்போது சமூக மன்றங்களில் வேலை ஆலோசகர்களை நியமித்தேன். சமூக மன்றங்களை வேலைக்கான நேர்காணல் இடங்களான மாற்றினேன். சிங்கப்பூர் உற்பத்திக் கூட்டமைப்புடன் இணைந்து தொகுதிக்குள்ளேயே பராமரிப்பாளர்களுக்கு வேலை தேட உதவினேன்.
“பின்பு விலைவாசி உயர்வைச் சமாளிக்க 2021ல் ரெட்ஹில் சந்தை, உணவு நிலையத்தில், ‘இட்ஸ் ஆன் மீ’ எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தினேன். இத்திட்டம் மூலம் 100,000க்கும் மேற்பட்ட உணவுகள், பானங்களை இலவசமாகக் குடியிருப்பாளர்கள் பெற்றுள்ளார்கள்,” என்றார் திரு மெல்வின் யோங்.
அவர் தேர்தல் களத்தில் சுயேச்சை வேட்பாளர் டேரில் லோ, சீர்திருத்த மக்கள் கூட்டணியின் குமார் அப்பாவு ஆகியோருடன் பொருதுவார்.