இணையத்தில் காதல் மோசடி செய்து கிடைத்த நிதியை மின்னிலக்க நாணயங்களாக மாற்ற உதவி செய்த தம்பதிக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மோசடி செய்து கிடைக்கும் பணத்தில் பங்கு உண்டு என்று மோசடியாளர்கள் கூறியதால் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து தம்பதி மோசடி செயலில் ஈடுபட்டனர்.
1 மில்லியன் வெள்ளிக்கு மேல் கிடைத்த நிதியை மின்னிலக்க நாணயங்களாகத் தம்பதி மாற்றியுள்ளனர்.
ஆண்டனி இங் ஸி சின், 53, ஃபுலாரன்ஸ் சூ லி ஜின், 52, ஆகிய இருவரும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். இருவரும் சிங்கப்பூரர்கள்.
சூ, கிட்டத்தட்ட 17,000 வெள்ளியைப் பங்காக வாங்கியுள்ளார். அவருக்கு ஆறு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
இங்மீது 13 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் மார்ச் 10ஆம் தேதி குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தம்பதியை செங் கெங் தியோங் என்னும் நபர் அணுகியுள்ளார். அவர்மூலம் தம்பதி மோசடி செயலைத் தொடங்கினர்.
2022ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து இத்தம்பதி மோசடியாளர்களுக்கு உதவியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தம்பதி அதிகாரிகளிடம் சிக்கினர். அதன் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
செங்கிற்கு 48 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

