இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

2 mins read
71e8f3f4-a8b6-4784-a148-538ef941ecee
ஜோசஃப் ஹாரிசன், லீன்ஸ் ஜோசஃப், அவர்களின் எட்டு வயது மகள் செரீன் மேரி ஹாரிசனுடன் வெளிநாட்டுப் பணிப்பெண் ராணா மம்தா (வலமிருந்து இரண்டாவது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

தங்கள் இல்ல உதவியாளர்க்குத் தங்களின் பாராட்டுதலையும் நன்றிக்கடனையும் வெளிப்படுத்தும் வகையில், இந்தியாவிலுள்ள அவரது சொந்த ஊரில் வீடு வாங்கிக் கொடுத்துள்ளனர் ஜோசஃப் ஹாரிசன் - லீன்ஸ் ஜோசஃப் இணையர்.

ஹாரிசன் இணையர்க்கு 14 மற்றும் எட்டு வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங்கைச் சேர்ந்த திருவாட்டி ராணா மம்தா, ஹாரிசன் இணையர் வீட்டில் பணிப்பெண்ணாகச் சேர்ந்தார்.

அப்போது, திரு ஹாரிசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திருவாட்டி ஜோசஃப் இரண்டாம் முறையாகக் கருவுற்றிருந்தார்.

“திருவாட்டி மம்தா எங்கள் வீட்டிற்கு வந்தபோது எங்களுக்குப் பல பிரச்சினைகள் இருந்தன. அவர் என்னுடன் பேசினார்; என்னுடன் சேர்ந்து இறைவனிடம் வேண்டிக்கொண்டார்,” என்றார் திருவாட்டி ஜோசஃப்.

இப்போது 43 வயதாகும் மம்தா தங்களுக்குக் கிடைத்தது தங்கள் வாழ்வில் நிகழ்ந்த மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்று என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் சொன்னார்.

இப்போது, அக்குடும்பத்தினர் அனைவரும் வாரந்தோறும் மம்தாவுடன் இணைந்து தேவாலயம் செல்கின்றனர்.

“அவர் கிடைத்தது எங்களின் நற்பேறு. எங்கள் வீட்டின் மேலாளர் அவர்தான்,” என்றார் அரசாங்கப் பணியாளரான 48 வயது ஹாரிசன்.

திருவாட்டி மம்தாவிற்கு உடன்பிறந்தோர் யாருமில்லை; பெற்றோரும் இறந்துவிட்டனர்.

“அவர் ஒன்றுமில்லாமல் சிங்கப்பூருக்கு வந்தார். அதனால், அவருக்குப் பாதுகாப்பான எதிர்காலத்தை அமைத்துத் தர நாங்கள் விரும்பினோம்,” என்றார், சாங்கி பொது மருத்துவமனையில் பணிபுரியும் 45 வயதான திருவாட்டி ஜோசஃப்.

அதற்கேற்ப, கடந்த 2021ஆம் ஆண்டு டார்ஜிலிங்கில் திருவாட்டி மம்தாவிற்கு $45,000 விலையில் ஒரு ‘ஸ்டுடியோ’ வீட்டை அவர்கள் வாங்கிக் கொடுத்தனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு அவ்வீட்டின் புதுமனைப் புகுவிழாவிற்காக ஹாரிசன் குடும்பத்தினர் டார்ஜிலிங் சென்றிருந்தனர்.

தன்னையும் அவர்களின் குடும்பத்தினரில் ஒருவராகக் கருதுவதற்குத் தான் நன்றிக்கடன்பட்டுள்ளதாகக் கூறினார் திருவாட்டி மம்தா.

“அவர்தான் எங்களது முதல், கடைசி இல்ல உதவியாளர்,” என்றார் திருவாட்டி ஜோசஃப்.

இந்த அணுக்கமான உறவுக்காக, திருவாட்டி மம்தாவும் திரு ஹாரிசனும் நவம்பர் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ‘முன்மாதிரி இல்லப் பணியாளர் மற்றும் முதலாளி’ விருது பெற்றனர்.

‘ஃபாஸ்ட்’ எனப்படும் சமுதாய ஆதரவு மற்றும் பயிற்சிக்கான வெளிநாட்டு இல்லப் பணியாளர் சங்கம் வழங்கிய 18 பணிப்பெண்-முதலாளி இணையர்களில் இவர்களும் அடங்குவர்.

குறிப்புச் சொற்கள்