சிங்கப்பூரில் ஜூலை 1ஆம் தேதி முதல் விவாகரத்து தொடர்பில் சில மாற்றங்கள் அமலுக்கு வருவதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு திங்கட்கிழமை (மே 13) தெரிவித்துள்ளது.
புதிய நடைமுறைப்படி, திருமணமான தம்பதிகள் விவாகரத்து பெறவிரும்பினால், மணமுறிவு தொடர்பாக தங்களது இருதரப்பும் சம்மதத்தைக் காரணமாக தெரிவித்துகொள்ளமுடியும்.
தம்பதிகளுக்கு இடையே இருதரப்பு சம்மதம் இருந்தால் விவாகரத்து தொடர்பான நடைமுறைகள் எளிதாக மாறும். மேலும் விவாகரத்து செய்துகொள்வோர், தங்களது 21 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பராமரிப்பதற்கு ஏதுவாக இணைப் பெற்றோர் திட்டம் (சிபிபி) விரிவாக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்தது.
மாதர் சாசனத்தில் இந்த மாற்றங்கள் குறித்து 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
திருமணத்திற்கு அப்பாற்பட்ட கள்ள உறவு, துன்புறுத்தல், நடத்தையில் மாற்றம், இருதரப்பு சம்மதத்துடன் மூன்று ஆண்டுகள் பிரிந்து வாழ்வது, இருதரப்பு சம்மதம் இல்லாமல் நான்கு ஆண்டுகள் பிரிந்து வாழ்வது உள்ளிட்ட காரணங்கள்தான் இதற்கு முன்னர் விவாகரத்துக்கான காரணங்களாக வகைப்படுத்தப்பட்டு இருந்தன.
விவாகரத்துக்காக இருதரப்பும் சம்மதத்தைக் காரணமாக தெரிவிக்கும் தம்பதிகள் தங்களது மணவாழ்க்கை எதனால் முறிகிறது, தம்பதிகள் என்ன சமரச முயற்சிகள் எடுத்தார்கள் போன்றவற்றை சான்றாகக் காட்டவேண்டும்.
மேலும் தம்பதிகள் குழந்தை வளர்ப்பு, நிதி ஒத்துழைப்பு போன்றவற்றிலும் தெளிவான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.
விவாகரத்துக்காக இருதரப்பும் சம்மதம் தெரிவித்திருந்தாலும் தம்பதிகள் சேர்ந்து வாழ முடியும் என்று நீதிமன்றம் நினைத்தால் தம்பதிக்கு விவாகரத்து கிடைக்காது.
தொடர்புடைய செய்திகள்
இந்த நடைமுறை மாற்றத்திற்கு முக்கியக் காரணம், விவாகரத்தால் ஏற்படும் மனக்கசப்பைக் குறைத்து, குடும்பம் சீரான பாதையில் முன்னேற உதவுவதற்கே என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் சுன் ஷுவெலிங் தெரிவித்தார்.
விவாகரத்தின்போது தம்பதியின் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர், அவர்களுக்கு உண்டாகும் தாக்கத்தை குறைக்கவும் புது நடைமுறை உதவும் என்றார் திருவாட்டி சுன்.

