ஆயுள் தண்டனை குற்றவாளியின் மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு

1 mins read
e817716e-d5fc-4df5-98dc-46114e7bb016
பிரேதப் பரிசோதனையில் குழந்தையின் தலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் இறந்தது எனக் கூறப்பட்டது. - படம்: ஃபேஸ்புக்

தன் காதலியின் 9 மாதக் குழந்தையைக் கொன்ற 30 வயது முகமது அலிஃப் முகமது யூசோஃப்பிற்கு ஆயுள் தண்டனையும் 15 பிரம்படிகளும் 2022ஆம் ஆண்டு நீதிமன்றம் விதித்தது.

அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

அதில், தான் குழந்தையை அடித்து கொலை செய்யவில்லை என்றும் குழந்தை எதிர்பாராத விதமாக தனது கையில் இருந்து நழுவி கீழே விழுந்ததாகவும் தனது மேல்முறையீட்டு விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதனால் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்ததாகவும் அவர் அதில் கூறியிருந்தார்.

மேலும், இரு காவல்துறை அதிகாரிகள் தனக்குக் கொடுத்த அச்சுறுத்தல் காரணமாகவே தான் குழந்தையைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் தான் குழந்தையின் தலையை வேனில் இருந்த பலகையில் மோதிக் கொலை செய்ததாக காவல்துறையின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்ததை தான் ஒப்புக்கொண்டதாகவும் அவர் தனது மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

அவருடைய மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்ததுடன் அவருடைய தண்டனையையும் உறுதி செய்தது.

யூசோஃப் தனது மேல்முறையீட்டு விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தபடி எந்தவொரு அச்சுறுத்தல்களும் நடக்கவில்லை என்பதை நீதிமன்றம் கண்டறிந்ததாகவும் அவர் தானாகவே முன்வந்து குழந்தையைக் கொன்றுவிட்டதாக வாக்குமூலம் அளித்திருந்தார் எனவும் மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதிமன்ற அமர்வு கூறியது.

மேலும், அவர் குழந்தை தவறுதலாகக் கை நழுவி விழுந்தது எனக் கூறுவது முற்றிலும் பொய்யானது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்