நிறுவனத்துக்கு $36,000 செலுத்த முன்னாள் ஊழியர்க்கு நீதிமன்றம் உத்தரவு

நிறுவனத்துக்கு $36,000 செலுத்த முன்னாள் ஊழியர்க்கு நீதிமன்றம் உத்தரவு

2 mins read
787664e3-1344-45ae-bf88-01b254f2fe58
இரு மாதங்கள் மட்டுமே பணிபுரிந்த லோ, பணி ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை என்று நிறுவனம் அவர் மீது வழக்குத் தொடர்ந்தது. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

பணி ஒப்பந்தத்தை மீறிய முன்னாள் ஊழியர், வேலை பார்த்த நிறுவனத்துக்கு $36,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் திங்கட்கிழமை (ஜூலை 27) தீர்ப்பு வழங்கியுள்ளது.

விமானம், விண்வெளி வாகனப் பராமரிப்பு நிறுவனமான ‘ஏரோஸ்பேஸ் சொல்யூஷன்ஸ் என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தில் தரம், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு மேலாளராகப் பணியாற்றிய லோ எங் வா, 2025 ஏப்ரல் முதல் தேதி அன்று பணிதுறப்புக் கடிதம் அளித்தார். அதில் இரு மாதங்கள் மட்டுமே பணிபுரிந்து மே 31 அன்று பணியிலிருந்து விலகுவதாகக் கூறி, அதன்படியே செய்தார்.

அவரது வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தின்படி, பணியிலிருந்து விலக விரும்பினால் ஆறு மாதங்கள் முன்னறிவிப்புக் காலம் அளிக்க வேண்டும் அல்லது அதற்குப் பதிலான சம்பளத்தைச் செலுத்த வேண்டும். 2023ல் பணியில் சேர்ந்த லோவின் மாதச் சம்பளம் $9,000.

மீதமுள்ள நான்கு மாதப் பணிக் காலத்திற்கான இழப்பீடாக $36,000 தொகையைக் கோரி நிறுவனம் அவர் மீது வழக்கு தொடர்ந்தது. வழக்கினை விசாரித்த மாவட்ட நீதிபதி எவன்ஸ் நங், நிறுவன நிர்வாகம் தனது முன்னறிவிப்புக் காலத்தைக் குறைக்க ஒப்புக்கொண்டதாக லோ முன்வைத்த வாதத்தை நிராகரித்தார்.

இருதரப்பு உரையாடல்கள், மின்னஞ்சல்களில் அத்தகைய உறுதியான உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். ஆறு மாத முன்னறிவிப்புக் காலம் என்பது மிகவும் அதிகம் என்ற லோவின் வாதத்தையும் வேலைவாய்ப்புச் சட்டப் பிரிவு 16ஐ சுட்டிக்காட்டி தள்ளுபடி செய்தார்.

ஒப்பந்த விதியை மீறியதற்காக லோ, நிறுவனத்திற்கு $36,000ஐ 5.33 விழுக்காடு ஆண்டு வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்நிறுவனம்ஊழியர்சம்பளம்பணிஒப்பந்தம்இழப்பீடுஉத்தரவு