வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்திருந்த தாதி ஒருவர், குளிரூட்டிப் பயன்பாடு தொடர்பான தகராறு முற்றியதால், வீட்டு உரிமையாளருக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
அது, துன்புறுத்தலாக மாறி வாடகை ஒப்பந்தம் முன்கூட்டியே ரத்துச் செய்யப்படும் நிலைக்குச் சென்றது. இந்த வழக்கு சிறு கோரிக்கை பஞ்சாயத்து மன்றத்திடம் வந்தது.
தாதியிடம் பிடித்துவைத்திருந்த $800 பாதுகாப்புத் தொகை உட்பட மொத்தம் $1,536.47ஐ வீட்டு உரிமையாளர் அவருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற விசாரணைகளுக்கு வீட்டு உரிமையாளர் தொடர்ந்து வராமல் இருந்தார். அதனால், அவருக்கு எதிரான தீர்ப்பை ரத்துச் செய்ய அவர் பின்னர் முயன்றார். ஆனால், பஞ்சாயத்து மன்ற நீதிபதி லியோன் அபிரகாம் டான் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்தார். பல வாய்ப்புகள் வழங்கப்பட்டும், வீட்டு உரிமையாளர் திட்டமிட்டே நீதிமன்றத்திற்கு வராமல் தவிர்த்ததை நீதிபதி கண்டறிந்தார்.
நீதிபதி தீர்ப்பைச் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) வெளியிட்டார். அதில் விசாரணைகளுக்காக நீதிமன்றம் கொடுத்த தேதிகளை வீட்டு உரிமையாளர் அலட்சியப்படுத்தியதாக அவர் கூறினார்.
மலேசியரான தாதியின் பெயரும் வீட்டு உரிமையாளரின் பெயரும் வெளியிடப்படவில்லை.
அந்தத் தாதியுடன் அவருடைய சகநாட்டுத் தோழியான இன்னொரு தாதியும் வீட்டில் தங்கியிருந்தார். ஒருவர் இரவு நேரத்திலும் இன்னொருவர் பகல் நேரத்திலும் வேலைசெய்தனர். அதனால் குளிரூட்டி ஒரு நாளில் 16 மணி நேரம் இயங்கியது. இது வாடகை ஒப்பந்தத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
“இரவுப் பணிக்குப் பிறகு பகலில் தூங்கவேண்டிய ஒருவருக்கு இது மிகவும் நடைமுறைக்கு உகந்த, அர்த்தமுள்ள ஏற்பாடு,” என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
வீட்டு உரிமையாளரின் மகளுக்கு இந்த ஏற்பாட்டில் அதிருப்தி ஏற்பட்டதால் பிரச்சினை தொடங்கியது.

