உலகளாவிய தீங்குநிரல் (malware) கட்டமைப்புடன் தொடர்புடைய குற்றங்களுக்காக சிங்கப்பூரில் தடுத்து வைக்கப்பட்டு, அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் சீனாவைச் சேர்ந்த சந்தேக நபரின் விண்ணப்பங்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
30 வயதுடைய வாங் யுன்ஹே, காவல்துறையினர் சில பொருள்களை ‘சட்டவிரோதமாக’ கைப்பற்றியதாகத் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் சிங்கப்பூர் அரசு சில ஆவணங்களின் அசல் மற்றும் பிற ஆதாரங்களைத் தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
அமெரிக்காவில் இணையக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்டதற்காக, மே 2024ல் சிங்கப்பூரில் ஓர் அனைத்துலக நடவடிக்கையின்போது வாங் தனது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
ஜனவரி 15 தேதியிட்ட தீர்ப்பின்படி, டெக்சாசின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில், கணினி மோசடி செய்ய சதி செய்தல், அத்தகைய மோசடிக்கு உதவி செய்தல் மற்றும் ஊக்குவித்தல், இணைய மோசடி, பணமோசடி செய்ய சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக வாங் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அமெரிக்கா, வாங்கை நாடுகடத்த கோரிக்கை விடுத்ததை அடுத்து சிங்கப்பூர் வாங்கைக் கைது செய்தது. வாங் கிட்டத்தட்ட பத்தாண்டு காலமாக ஒரு பெரிய கட்டமைப்பை நடத்தி வருவதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
அரசு நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு எதிரான உத்தரவுகளை ரத்து செய்யக் கோரிய வாங்கின் மனுவை நீதிபதி சுவா லீ மிங் தள்ளுபடி செய்தார்.
பல பற்று அல்லது கடன் அட்டைகள், தொலைபேசிகள், விரலி (thumb drive), ஒரு மடிக்கணினி, மேசைக் கணினி உள்ளிட்ட பல பொருள்களைக் காவல்துறை பறிமுதல் செய்தது சட்டவிரோதமானது என்ற தீர்ப்பை வாங் கோரியிருந்தார்.
அரசு நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி இந்த விண்ணப்பங்களைத் தள்ளுபடி செய்திருந்தார். மேலும் வாங் உயர் நீதிமன்றத்தில் நீதித்துறை மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்து தள்ளுபடியை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
நீதித்துறை மறுஆய்வு மனு ‘உண்மையில் மாறுவேடத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடு’ என்று நீதிபதி சுவா வர்ணித்தார்.
நீதிபதியின் முந்தைய தீர்ப்பை அவர் உறுதிசெய்து வாங்கின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்து, வாங்கிற்கு S$8,000 வழக்குச் செலவுகளைச் செலுத்த உத்தரவிட்டார்.
வாங்கின் நாடுகடத்தல் தொடர்பான விசாரணை நிலுவையில் இருப்பதால், அவர் சிங்கப்பூரில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

