சிங்கப்பூர் உயர் நீதிமன்றம், பங்ளாதேஷின் மின் உற்பத்தி நிலையமொன்று கோர முயன்ற 2 மில்லியன் அமெரிக்க டாலரைத் தடுக்கும் உத்தரவை நிலைநிறுத்தியுள்ளது.
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் உத்தரவாதப் பத்திரத்தின்கீழ் அந்தத் தொகையை நிலையம் பெற முயன்றது. அதில் மோசடி நடந்துள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பங்ளாதேஷின் அன்லிமா மெக்நாகட் மின்னாலையின் விண்ணப்பத்தை மூத்த நீதிபதி சான் செங் ஓன் திங்கட்கிழமை (ஜனவரி 26) நிராகரித்தார்.
வங்கி உத்தரவாதத்தின் தொடர்பில் நிறுவனம் மோசடி செய்துள்ளதாக அவர் கூறினார்.
2021ஆம் ஆண்டு அமெரிக்காவில் இயங்கும் சுவிட்சர்லாந்தின் ஜிஇ வெர்னோவா மின் சாதன நிறுவனம், அன்லிமாவுடன் ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டது. பங்ளாதேஷ் நிறுவனம், மின்னாலைத் திட்டத்திற்காக எரிவாயுச் சுழலியை வாங்க 2 மில்லியன் அமெரிக்க டாலரை முன்பதிவுக் கட்டணமாக ஜிஇ வெர்னோவாவிடம் கொடுத்திருந்தது.
ஜிஇ வெர்னோவா அதன் ஒப்பந்த நிபந்தனைகளை மீறவில்லை என்றால் கட்டணத்தைத் திரும்பப் பெற முடியாது என்பது உடன்பாட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
2024ஆம் ஆண்டு நவம்பரில் பங்ளாதேஷ் மின் உற்பத்திக் கழகம், மின்னாலைத் திட்டத்திற்கான அன்லிமாவின் விருப்பக் கடிதத்தை ரத்து செய்தது.
அன்லிமா அதன்பின்னர், தான் ஏற்கெனவே கொடுத்த கட்டணத்தை மீட்க முயன்றது.
தொடர்புடைய செய்திகள்
சம்பந்தப்பட்ட உடன்பாடு, விநியோக ஒப்பந்தம் இல்லை என்பது தெளிவாய்த் தெரிவதாக நீதிபதி சான் கூறினார். ஒப்பந்தத்தின்படி அன்லிமா நிறுவனம், எரிவாயுச் சுழலியை வாங்கவேண்டும் எனும் கட்டாயம் இல்லை என்றார் அவர்.
ஜிஇ வெர்னோவா, சென்ற ஆண்டு (2025) டிசம்பர் 31ஆம் தேதி வரை குறிப்பிட்ட விலையில் எரிவாயுச் சூழலியைப் பாதுகாத்து வைப்பதே அதன் கடமையாக இருந்தது. இறுதிவரை ஜிஇ வெர்னோவா நிறுவனம் அந்தக் கடமையிலிருந்து விலகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
முன்பதிவுக் கட்டணத்தையும் அதைத் திருப்பித் தரமுடியாது என்பதையும் ஜிஇ, அன்லிமா இரு நிறுவனங்களுமே ஏற்கெனவே ஒப்புக்கொண்டதை நீதிபதி சான் சுட்டினார்.


