கடன் வசூலிப்பவர் ஒருவர், கடன்தொகை நிலுவையில் இருந்த பெண்ணின் வீட்டின்முன் நின்று கூச்சலிட்டதும், அவருடைய கணவரின் வேலை இடத்திறகுச் சென்று தொந்தரவு செய்ததும் சட்டவிரோதம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால், கடன் வசூலிக்கும் நிறுவனம் சார்பில் ஊழியர் ஒருவர் அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
அங்கு அந்த ஊழியர், கடன் நிலுவையை உடனடியாகச் செலுத்தக் கோரி உரத்தக் குரலில் கூச்சலிட்டு, அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தினார்.
மேலும், அப்பெண்ணுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், அவரது கணவர் பணிபுரியும் அலுவலகத்திற்கே நேரில் சென்று தகராறில் ஈடுபட்டார்.
அச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, கடன் வசூலிக்கும் நடவடிக்கை என்ற பெயரில் ஒருவரின் தனிநபர் சுதந்திரத்திலும் தொழில் சார்ந்த இடத்திலும் வரம்பு மீறிச் செயல்படுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
கடன் வாங்கிய நபரின் வீட்டிற்கு முன் நின்று பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கூச்சலிடுவதும் கடனுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத கணவரின் பணிமனைக்குச் சென்று அவமதிப்பதும் சட்டப்படி குற்றமாகும் என்று சுட்டிக்காட்டினார்.
கடன் வசூலிக்கும் நிறுவனங்கள் சட்டத்திற்கு உட்பட்டும் நெறிமுறைகளைப் பின்பற்றியும் மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், இதுபோன்ற அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.


