திருமண பந்தத்தைக் காப்பாற்ற நீதிமன்றங்கள் முயற்சி

திருமண பந்தத்தைக் காப்பாற்ற நீதிமன்றங்கள் முயற்சி

2 mins read
f5cbb0e6-4c6c-4911-b251-e063169917f8
ஆகஸ்ட் மாதம் முடிவு வரை மணமுறிவுக்கு விண்ணப்பித்த 8 விழுக்காட்டினர் இருதரப்பு ஒப்புதலுடன் மணமுறிவுக்கு விண்ணப்பித்திருந்தனர். - படம்: பிக்சபே

சுமுகமான முறையில் மணமுறிவுக்கு விண்ணப்பிக்கும் தம்பதியருக்கு அந்தத் திருமண பந்தத்தைக் காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளும்படி நீதிமன்றம் உத்தரவிடக்கூடும்.

மணமுறிவுக்கு விண்ணப்பிக்கும் தம்பதியர் மறுபடியும் சேர்ந்து வாழக்கூடிய நியாயமான சாத்தியக்கூறுகள் இருக்கும்பட்சத்தில் நீதிமன்றங்கள் அவ்வாறு உத்தரவிடக்கூடும்.

உதாரணத்திற்கு, சுமுகமாக மணமுறிவுக்கு விண்ணப்பிக்கும் தம்பதியர், தாங்கள் திருமண பந்தத்தைக் காப்பாற்ற என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர் என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்கவேண்டும். இதன் அடிப்படையில், அந்தத் திருமண பந்தத்தைக் காப்பாற்ற நியாயமான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்று பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று குடும்ப நல நீதிமன்றங்களின் பேச்சாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

தம்பதியர் தங்கள் திருமண பந்தம் மீண்டும் இணைக்கமுடியாதபடி முறிந்துவிட்டதாகக் கூறி அதன் அடிப்படையில் மணமுறிவுக்கு விண்ணப்பிக்க கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்படுகிறது.

இதன் தொடர்பில், வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற குடும்பநலச் சட்ட மாநாட்டில் பேசிய நீதிபதி டே ஹுவி ஹுவி, தம்பதியரின் திருமண பந்தத்தைக் காப்பாற்ற நியாயமான சாத்தியம் இருப்பதாகக் கருதினால் சுமுகமான முறையில் மணமுறிவு கோரும் விண்ணப்பத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்காது என்று தெரிவித்தார்.

இனி சுமுகமான முறையில் மணமுறிவு கோரும் தம்பதியர் திருமண பந்தத்தை ஏன் தொடர முடியாது என்பதற்கான காரணங்கள் குறித்து எழுத்துபூர்வமாக விளக்கமளிக்க வேண்டும். இதன் தொடர்பில் திருமண பந்தத்தை மீட்டெடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், நிதிப் பகிர்வு, பிள்ளைகள் தொடர்பாக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் ஆகியவை பற்றியும் விளக்கமாக நீதிமன்றத்திடம் தெரிவிக்கவேண்டும்.

குறிப்புச் சொற்கள்