சிங்கப்பூர் காட்டுப்பூனை செயற்குழு 2025ஆம் ஆண்டு ஜூலை முதல் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரை சாங்கி வட்டாரத்தில் உள்ள கடலோரக் காடுகளில் ஆய்வு நடத்தியது.
லாபநோக்கமற்ற அந்த அமைப்பினர் அங்கு 18 நடமாட்ட உணர்கருவிகள் அமைந்த கேமராக்களை ரகசியமாகப் பதுக்கி வைத்திருந்தனர். ஏறத்தாழ ஓராண்டுக்கு இரவு நேரங்களில் அங்குள்ள விலங்கியல் நடவடிக்கைகளைக் கண்காணிக்க அவர்கள் முயன்றனர்.
அதன்பயனாக அங்கு ஐந்து சிறுத்தை வகைப் பூனைகள் வாழ்வது கண்டறியப்பட்டது. அவை சுயமாக பராமரித்துக்கொள்வது, உணவைத் தேடி வேட்டையாடுவது போன்ற அன்றாட செயல்பாடுகள் கேமராக்களில் பதிவாயின.
அரிய வகைப் பூனைகளாக அவை அடையாளம் காணப்பட்டவை. எனவே சாங்கி வட்டாரம் மேம்பட்டுவருவதால், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் அப்பூனைகளை இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
விலங்கியல் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் கண்காணிப்புக் கருவிகளை பற்பல காரணங்களுக்காக பயன்படுத்துகின்றனர்.
விலங்குகளின் மொத்த எண்ணிக்கை, குணாதிசயங்கள், உணவுத் தேர்வுகள், பழக்க வழக்கங்கள் போன்ற பல முக்கிய விவரங்கள் அவ்வாறு ஆய்வுக்குட்படுகின்றன.
சாதாரண வேளைகளில் மனிதக் கண்களுக்குப் புலப்படாத பலவற்றை, கேமராக்கள் வெளிக்காட்ட உதவுகின்றன. நிலத்திலும் நீருக்கடியிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு, விலங்கியல் சார்ந்த இயற்கை ஆராய்ச்சிக்கு அவை பெரும் பங்காற்றுகின்றன.
விலங்குகளின் பாதுகாப்புக்கும் பராமரிப்புக்கும் கேமராக்கள் முக்கியமானவை. அவற்றில் இருக்கும் பதிவுகளைக் கொண்டு விலங்குகளின் அன்றாட வாழ்வில் நேரடியாக இடையூறு செய்யாமல் எதில் அதிகம் கவனம் செலுத்தவேண்டும் என்பது அறியப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
விலங்கியல் அறிஞர்கள் கருத்து
இதனை மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் உட்பிரிவான சிங்கப்பூர் இயற்கை அமைப்பின் உள்ளூர் பல்லுயிர் பெருக்கத்திற்கான மூத்த மேலாளர் டெலனி இங் கூறினார்.
விலங்குகளின் வாழ்விடத்தையும் உட்கட்டமைப்புகளையும் மேம்படுத்துவதற்கும் இந்த ரகசிய கேமராக்கள் உதவுகின்றன என்று அவர் விளக்கினார்.
ரகசிய கேமராக்களில் அதிநவீன உணர்க்கருவிகள் செயலாற்றுகின்றன. வெப்ப தட்ப நிலை மாற்றம் ஏற்படும்போது அவை உடனே செயல்படத் தொடங்குகின்றன.
ஒவ்வொரு விலங்கினத்துக்கும் தனிப்பட்ட உடல் வெப்பம் இருக்கும். உதாரணமாக ஊர்ந்து நகரும் பாம்புகள் குளிர் ரத்த விலங்குகளாக இருப்பதால் அவற்றின் வெப்பத்துக்கு ஏற்ப கருவிகள் இயங்கும். அதேவேளை, வெப்பம் அதிகம் உள்ள விலங்குகள் நடந்து சென்றால் கருவிகள் தானியங்கி முறையில் பதிவு செய்யத் தொடங்கும்.
மின்கலன் (பேட்டரி) இயங்கும் காலம்வரை, எவ்விதத் தடங்கலும் இன்றி 24 மணிநேரமும் கேமராக்கள் செயலாற்றும். எனவே தேவைப்படும் இடங்களில் சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை அவை ரகசியப் பதிவுகள் செய்யக்கூடியவை என்று விலங்கியல் விஞ்ஞானி மார்கஸ் சுவா தெரிவித்தார்.

