சிங்கப்பூரில் டிசம்பர் 12 முதல் 17 வரை கொவிட்-19 தொற்று நிலைப்பட்டுள்ளது

சிங்கப்பூரில் டிசம்பர் 12 முதல் 17 வரை கொவிட்-19 தொற்று நிலைப்பட்டுள்ளது

1 mins read
cd131778-599e-451a-b645-ef8eed2dc88d
மக்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக இருந்து முகக்கவசம் அணிய வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் டிசம்பர் 12 முதல் 17ஆம் தேதி வரையிலான வாரத்தில் கொவிட்-19 தொற்று நிலைப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சராசரியாக, டிசம்பர் 12ஆம் தேதி 7,870ஆக பதிவான தொற்று எண்ணிக்கை, டிசம்பர் 17ஆம் தேதி 7,730 ஆக சற்றே சரிந்தது.

தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருந்தாலும் கடுமையான நோய்ப் பாதிப்பு, மரணங்கள் குறித்த நிலவரம் பின்னரே தெரியவரும். என்றாலும், இது கவலைக்குரிய அம்சம் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

டிசம்பர் 3 முதல் 9ஆம் தேதி வரையிலான வாரத்தில், கொவிட்-19 நோயாளிகள் 763 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். 23 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து, மருத்துவமனை படுக்கைகளுக்கான தேவை அதிகரிக்கும் பட்சத்தில், அவசரமற்ற அறுவை சிகிச்சைகளைத் தாமதப்படுத்த இங்குள்ள பொது மருத்துவமனைகள் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிகுறிகள் தென்படுவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்பே தொற்று பரவும் என்பதால், மக்கள் அதை நன்கு உணர்ந்து சமூகப் பொறுப்புடன் இருக்க வேண்டும் எனவும் நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

குறிப்புச் சொற்கள்