வரும் அக்டோபர் 12ஆம் தேதியிலிருந்து கொவிட்-19 தடுப்பூசி இரு தேசிய தடுப்பூசிப் பட்டியல்களில் சேர்க்கப்படுகிறது.
குறிப்பிட்ட மூன்று பிரிவினர் இத்தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள பரிந்துரைக்கப்படுவர் என்று சுகாதார அமைச்சும் தொற்றுநோய் தடுப்பு அமைப்பும் புதன்கிழமை (அக்டோபர் 7) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.
அறுபது வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய முதியவர்கள், ஆறு மாதமும் அதற்கும் மேற்பட்ட வயதுமுடைய மருத்துவப் பாதிப்பு உள்ளவர்கள், முதியோர் பராமரிப்பு இல்லவாசிகள் ஆகியோருக்கு இத்தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.
சுகாதாரப் பணியாளர்களும் மருத்துவப் பாதிப்பு உள்ளவர்களுடன் வசிப்பவர்களும் இத்தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
தேசிய சிறுவர் தடுப்பூசிப் பட்டியல், தேசிய பெரியோர் தடுப்பூசிப் பட்டியல் இரண்டிலும் கொவிட்-19 தடுப்பூசி சேர்க்கப்படுவதன் மூலம், பொதுமக்கள் இதனை எளிதாகவும் குறைந்த செலவிலும் தொடர்ந்து பெறமுடியும்.
சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்குக் குறிப்பிட்ட மருத்தகங்கள், பலதுறை மருந்தகங்கள், நடமாடும் தடுப்பூசி மையங்களில் இத்தடுப்பூசி தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும்.
முதன்முறையாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வோரில், ஆறு மாதம் முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகள் எட்டு வார இடைவெளியில் இரு தவணைகளாகவும், ஐந்து வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடையவர்கள் ஒரு முறையும் போட்டுக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொண்டோர், கடைசித் தவணையிலிருந்து ஓராண்டுக்குப் பிறகு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
அக்டோபர் 12ஆம் தேதிமுதல் 600க்கும் மேற்பட்ட பொது மருந்தகங்கள், அனைத்து பலதுறை மருந்தகங்கள், நடமாடும் தடுப்பூசி மையங்களில் மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் கிடைக்கும்.
‘ஹெல்த்ஹப்’ செயலி அல்லது ‘vaccine.gov.sg/covid’ இணையத்தளம் வழியாக முன்பதிவு செய்யலாம். ஆரோக்கியமான எஸ்ஜி (ஹெல்தியர் எஸ்ஜி) திட்டத்தில் பதிவுசெய்துள்ளவர்கள், தங்கள் மருந்தகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வசதி இருந்தால் அங்கு அதைப் போட்டுக்கொள்ளலாம்.
