உழவுக்குத் துணையாக இருக்கும் காளை மாடுகளுக்கும் பால் தரும் பசு மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் வண்ணம் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
புதன்கிழமை (ஜனவரி 15) பிற்பகல், தேக்கா வட்டாரத்தின் கிளைவ் ஸ்திரீட்டில் உள்ள ‘பொலி’ திறந்தவெளியில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் கூட்டம் சூழ்ந்திருக்கக் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விக்னேஷ் பால் பண்ணையைச் சேர்ந்தோர், லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தோடு (லிஷா) இணைந்து தங்கள் பண்ணையின் பசு மாடுகளையும் காளை மாடுகளையும் காட்சிக்கு வைப்பது வழக்கம்.
மாடுகளின் கொம்புகளுக்குச் சாயம் பூசி, அவற்றுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, பரிவட்டம் கட்டி அலங்கரிக்கப்பட்டது.
அதோடு சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. மூன்று பானைகளில் பொங்கல் வைத்துப் படைக்கப்பட்டது. சங்கு ஊதி, பூஜை செய்து பாரம்பரிய முறையில் வழிபாடு நடைபெற்றது.
புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பெய்த கனத்த மழையோ வார நாளில் இது கொண்டாடப்படுவதோ பொதுமக்கள் கூட்டத்தைக் குறைக்கவில்லை. மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம் குறைவின்றி இடம்பெற்றது.
“நாங்கள் பல ஆண்டுகளாக லிஷாவுடன் இணைந்து இந்த மாட்டுப் பொங்கல் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்கிறோம். வாரநாளாக இருந்தாலும் தமிழர்களுக்கு அப்பாற்பட்டு இதர இனத்தவர்களையும் இன்று காண முடிகிறது. இது சிங்கப்பூரின் பல்லினக் கலாசாரத்தை எடுத்துரைக்கிறது. மேலும், எங்கள் பண்ணையின் கால்நடைகளை வைத்துச் சிங்கப்பூரில் மாட்டுப் பொங்கல் கொண்டாட முடிவது எனக்குப் பெருமையாக உள்ளது,” என்று பண்ணை உரிமையாளர் சுப்பிரமணியம், 74, தெரிவித்தார்.
“விக்னேஷ் பால் பண்ணையினர் சிங்கப்பூரில் மாட்டுப் பொங்கல் கொண்டாட எங்களுக்குப் பெரிதும் ஆதரவாக உள்ளனர். அவர்கள் பண்ணையிலிருந்து கால்நடைகளை அழைத்து வரப் பல சவால்களைச் சந்தித்தாலும் இது நம் பாரம்பரியம் என்பதால் அவர்கள் எங்களுடன் பெரிதும் ஒத்துழைக்கின்றனர்,” என்று லிஷா தலைவர் ரெகுநாத் சிவா கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“இஸ்லாம் சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் என் பிள்ளைகள் இதர கலாசாரக் கூறுகளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதால் இன்று குடும்பத்துடன் இங்கு வந்துள்ளேன். பிள்ளைகள் கால்நடைகளைத் தொடுவதும் தடவிக்கொடுப்பதும் அவர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும்,” என்று நிதித்துறையில் பணியாற்றும் முகம்மது அஞ்சத், 36, சொன்னார்.
“முதல் முறையாக நான் மாட்டுப் பொங்கலுக்கு லிட்டில் இந்தியா வந்துள்ளேன். மாடுகளைத் தொட்டுப் பார்த்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,” என்று இல்லத்தரசி சத்யவேணி, 69, பகிர்ந்துகொண்டார்.

