2024 மார்ச் 31க்குள் 300,000 வெளிநாட்டினரின் மசேநி கணக்குகள் மூடப்பட வேண்டும்

2 mins read
56a64279-1dbc-437c-9ed6-af30b2d637aa
இந்த மசேநி கணக்குகளில் சில, சிங்கப்பூர் குடியுரிமை அல்லது நிரந்தரவாசத் தகுதியைத் துறந்தவர்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள் அல்லாத வெளிநாட்டினர் ஏறக்குறைய 300,000 பேரின் மத்திய சேம நிதி (மசேநி) கணக்குகள் 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் மூடப்பட வேண்டும். இந்தக் காலக்கெடுவுக்குப் பிறகு, அவை தானாகவே மூடப்படும்.

இந்தக் கணக்குகள் குடிமக்கள் அல்லாதவர்களும் நிரந்தரவாசிகளும் தங்கள் மசேநி கணக்குகளில் தன்னிச்சையாக பணம் நிரப்புவது நிறுத்தப்பட்ட 2003ஆம் ஆண்டுக்கு முன் தொடங்கப்பட்டவை.

மீதமுள்ள எந்தவொரு சேமிப்புக்கும் நடைமுறையில் உள்ள மசேநி வட்டி விகிதமும் அளிக்கப்படாது. மீதமுள்ள சேமிப்பை எந்த நேரத்திலும் அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிக்கொள்ளலாம் என்று மசேநி கழகம் புதன்கிழமை (மார்ச் 8) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இந்த மசேநி கணக்குகளில் சில, சிங்கப்பூர் குடியுரிமை அல்லது நிரந்தரவாசத் தகுதியைத் துறந்தவர்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

பெரும்பாலான கணக்குகளில் குறைந்த தொகையே உள்ளது. 200,000க்கும் மேற்பட்டவர்களுக்கு பல ஆண்டுகளாக $5,000க்கும் குறைவான தொகையையே இக்கணக்கில் உள்ளது. ஏனெனில், சிங்கப்பூர் வெளிநாட்டினருக்கான மசேநி பங்களிப்புக் கொள்கையில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வந்துள்ளது.

1987ஆம் ஆண்டுக்கு முன்னர், குடியுரிமை பேதமின்றி நாட்டில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் மசேநி பங்களிப்பு கட்டாயமாக்கப்பட்டது.

பின்னர் வொர்க் பர்மிட்டில் பணிபுரிபவர்கள் தங்கள் மசேநி கணக்கில் கட்டாயப் பங்களிப்புகளைச் செய்வதற்குப் பதிலாக, தன்னிச்சையாகப் பங்களிப்புச் செய்யும் முறைக்கு மாற்றப்பட்டது. 1995ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பணிபுரியும் அனைத்து வெளிநாட்டினருக்கும், எல்லா விதமான வேலை அனுமதி அட்டையை வைத்திருப்போருக்கும் இது விரிவுபடுத்தப்பட்டது.

2003ஆம் ஆண்டில் தன்னிச்சையாக பணம் நிரப்புவது நிறுத்தப்பட்டது.

சிங்கப்பூரில் சேமிக்கத் திட்டமிடும் வெளிநாட்டினர், துணை ஓய்வூதியத் திட்டம் அல்லது வணிக முதலீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பிற தேர்வுகளைப் பரிசீலிக்கலாம் என்று மசேநி கழகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் விவரங்களுக்கு மசேநி கழகத்தின் cpf.gov.sg/AccountClosure என்ற இணையப் பக்கத்தைப் பார்க்கவும்.