மசே நிதி அடிப்பைடைச் சுகாதாரப் பராமரிப்புத் தொகை அதிகரிப்பு

2 mins read
65 வயதுக்குக் குறைவானோருக்கு இது பொருந்தும்
6f44d6c3-4d3e-4e47-9cae-d7f0f0d4a208
மத்திய சேமநிதி அலுவலகம். - கோப்புப் படம்: சாவ்பாவ்

மத்திய சேமநிதி (மசே நிதி) உறுப்பினர்களாக இருக்கும் 65 வயதுக்கும் குறைந்தோருக்கு அடிப்படைச் சுகாதாரப் பாமரிப்புத் தொகை 75,500 வெள்ளியிலிருந்து 79,000 வெள்ளிக்கு உயர்த்தப்படவுள்ளது.

இந்த மாற்றம் வரும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி நடப்புக்கு வரும். 66 வயது அல்லது அதையும் தாண்டியோருக்கான மசே நிதி அடிப்படைச் சுகாதாரப் பராமரிப்புத் தொகையில் மாற்றம் இருக்காது என்று மசே நிதி, சுகாதார அமைச்சு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) ஆகிய மூன்றும் திங்கட்கிழமை (டிசம்பர் 15) தெரிவித்தன.

மசே நிதி சிறப்பு மற்றும் ஓய்வுகாலக் கணக்குகள், மெடிசேவ் ஆகியவற்றுக்கான வட்டி விகிதத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை மாற்றம் இருக்காது. வட்டி விகிதம் தொடர்ந்து ஆண்டுக்கு நான்கு விழுக்காடாக இருக்கும்.

அதேபோல், மசே நிதி சாதாரணக் கணக்குக்கான வட்டி விகிதம் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் தொடர்ந்து 2.5 விழுக்காடாக இருக்கும்.

அந்தக் காலகட்டத்தில் 55 வயதுக்குக்கீழ் உள்ள மசே நிதி உறுப்பினர்கள், தங்கள் எல்லா மசே நிதி கணக்குகளிலும் ஒட்டுமொத்தமாக இருக்கும் முதல் 60,000 வெள்ளிக்கு கூடுதலாக ஒரு விழுக்காடு வட்டி பெறுவர். மசே நிதி சாதாரணக் கணக்கில் இதற்கான அதிகபட்சத் தகுதித் தொகை 20,000 வெள்ளி.

55 வயது அல்லது அதையும் தாண்டியவர்கள், தங்கள் எல்லா மசே நிதிக் கணக்குகளிலும் ஒட்டுமொத்தமாக இருக்கும் தொகையில் முதல் 30,000 வெள்ளிக்குக் கூடுதலாக இரண்டு விழுக்காடு வரி பெறுவர் (மசே நிதி சாதாரணக் கணக்கில் இதற்கான அதிகபட்சத் தகுதித் தொகை 30,000 வெள்ளி), அடுத்த 30,000 வெள்ளிக்குக் கூடுதலாக ஒரு விழுக்காடு வரி பெறுவர்.

மசே நிதி உறுப்பினர்களின் ஓய்வுகால சேமிப்பை அதிகரிக்க அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளில் இந்நடவடிக்கையும் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்