ஜோகூர் பாரு: ஜோகூரில் அரசாங்க மானியத்துடன் விநியோகிக்கப்படும் ரோன்95 ரக பெட்ரோலை நிரப்பியதாகக் கூறப்படும் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், ஏப்ரல் 1ஆம் தேதி புதிய விதிமுறை அமுலுக்கு வந்த பிறகு கைது செய்யப்பட்ட முதல் நபராவார்.
“ஜோகூரில் வியாழக்கிழமை இரவு 10.00 மணியளவில் அமலாக்க அதிகாரிகள் பெட்ரோல் நிலையங்களில் சோதனைகளை மேற்கொண்டபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்,” என்று உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் ஜோகூர் பிரிவு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
“சோதனையில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட காரில் ரோன்95 ரக பெட்ரோல் நிரப்புவது கண்டுபிடிக்கப்பட்டது,” என்று அப்பிரிவை மேற்கோள்காட்டி உள்ளூர் ஊடகமான நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்(என்எஸ்டி) செய்தி வெளியிட்டிருந்தது. அந்த நபர் ஐம்பது வயதுகளில் இருந்த சிங்கப்பூரர் என்றும் அது குறிப்பிட்டது.
ஆனால் பெர்னாமா, மலேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் அவரை ஒரு வெளிநாட்டவர் என்று அடையாளப்படுத்தியிருந்தன.
“கிடைத்த தகவல் மற்றும் கண்காணிப்பின் அடிப்படையில் அமலாக்க அதிகாரிகள் ரோன்95 ரக பெட்ரோலை ஓட்டுநர் தொடர்ந்து நிரப்புவதைத் தடுத்தனர்,” என அமைச்சின் பிரிவு என்எஸ்டி செய்தி தெரிவித்தது.
கறுப்புநிற ஹோண்டா சிவிக் கார், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் அது தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
“ஹோண்டா சிவிக் காரின் ஓட்டுநர் என நம்பப்படும் சந்தேக நபர் மேல் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஏப்ரல் 1ஆம் தேதி அமலுக்கு வந்த விதிகளின்படி, வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் மற்றும் பெட்ரோல் நிலைய நடத்துநர் ஆகிய இருவர் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியும்.
முன்னதாக, வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு மானிய விலையில் எரிபொருள் விற்றதற்காக பெட்ரோல் நிலைய நடத்துநர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டனர்.

