தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜாலான் தெனாகா புளோக்கில் வீடுகளின் மேல்மட்டத்தில் விரிசல்கள்

2 mins read
93044cdd-3ba0-47e4-955e-4463382c85c3
பிடோக் ரெசர்வோருக்கு அருகில் உள்ள வீடமைப்புப் பேட்டையின் ஆக உயர்ந்த மாடியில் வசிக்கும் குறைந்தது நான்கு வீடுகளில் விரிசல்கள் காணப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜாலான் தெனாகாவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் கூரையில் கடந்த அக்டோபர் மாதம் குத்தகையாளர்கள் பணிகள் மேற்கொண்டபோது, ஆக உயர்வான மாடியில் உள்ள திரு டானுடைய வீட்டின் மேல்மட்டத்தில் கிட்டத்தட்ட 2 மீட்டர் நீளமான விரிசல் ஏற்பட்டது.

அவரது படுக்கையறைக்கு மேல் அந்த விரிசல் ஏற்பட்டது.

“விரிசல் மோசமடைந்தால் மேல்மட்டம் என்மீது விழுந்துவிடும் என நான் கவலைப்படுகிறேன்,” என்று அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

பிடோக்கின் ஜாலான் தெனாகா பேட்டையில் உள்ள 17 புளோக்குகளில் கூரை மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பிடோக் ரெசர்வோருக்கு அருகில் உள்ள இந்தப் பேட்டையின் ஆக உயர்வான மாடியில் வசிக்கும் குறைந்தது நான்கு குடும்பங்கள், இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய அந்தப் பணிகளுக்குப் பிறகு, தங்கள் வீடுகளில் விரிசல்களைக் கண்டதாகக் கூறியுள்ளன. அவற்றில், திரு டானின் குடும்பமும் ஒன்று.

மனைவியுடன் வீட்டில் வசிக்கும் திரு டான், 75, நகர மன்றத்திடம் கடந்த அக்டோபரில் அந்த விரிசல் குறித்து புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து, சேதமுற்ற பகுதியைப் படமெடுக்க, அந்த நான்கறை எக்சிகியூட்டிவ் வீட்டுக்குப் பிரதிநிதி ஒருவரை நகர மன்றம் அனுப்பியது.

இருப்பினும், சில நாள்களுக்குப் பிறகு, வீட்டின் வசிப்பறையில் கிட்டத்தட்ட மூன்று மீட்டர் நீளமான மற்றொரு விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், ஒவ்வொரு 14 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மேற்கொள்ளப்படவேண்டிய பணிகளின் ஒரு பகுதியாக ஜாலான் தெனாகா கூரை மறுசீரமைப்புப் பணிகள் நடப்பதாக அல்ஜுனிட் - ஹவ்காங் நகர மன்றம் கூறியது.

அவை, வானிலையைப் பொறுத்து, 2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அது தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அவற்றில் சீர்த்திருத்தப் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்போவதாகவும் நகர மன்றம் கூறியது.

குறிப்புச் சொற்கள்