தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொண்டூழியப் பணியின்வழி படரும் நற்பலன்

7 mins read
915dd67e-4c90-4979-916f-4172b9dabb47
மவுண்ட்பேட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் பியாவ் சுவான், தொண்டூழியர்களுடன் திருமதி திரிஷ்டி பாப்லானி (முதல் வரிசையில், இடமிருந்து நான்காவது). -

V.K. சந்தோ‌ஷ் குமார்

சமுதாயத்தின் மேம்பாட்டுக்கும் வசதி குறைந்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் கனிவான சிறு சிறு செயல்கள் பங்களிக்கும் என்று நம்புகிறார் திருமதி திரிஷ்டி பாப்லானி.

அந்தச் சிந்தனையே "The Kindness Ripple" எனும் இயக்கத்தை 2018 ஏப்ரல் மாதம் அவர் தொடங்குவதற்குத் தூண்டுகோலாக இருந்தது. இந்த இயக்கம், உணவுப் பொருட்களைச் சேகரித்து, சிங்கப்பூரில் உள்ள சமூகநல அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்குகிறது.

ஆரம்பத்தில் சில தொண்டூழியர்களுடன் தொடங்கிய இந்த இயக்கத்தில் இப்போது 45 தொண்டூழியர்களுடன் செயல்படுகிறது. அவர்களில் 60 விழுக்காட்டினர் பெண்கள்.

"சமுதாயத்திற்கு நம் பங்கைச் செய்யவேண்டும் என்பதில் நானும் எனக்குத் தெரிந்த பலரும் கொண்டிருந்த நம்பிக்கையே இந்த இயக்கத்தைத் தொடங்குவதற்கான தூண்டுகோலாக இருந்தது," என்றார் திருமதி பாப்லானி. அவர் ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் விநியோக ஒழுங்குமுறை மேலாளராகப் பணிபுரிகிறார்.

"சிறு சிறு வழிகளில் உதவி புரிந்து சமுதாயத்திற்குத் தம் பங்கைச் செய்யப் பலரும் விரும்புகின்றனர். ஆனால், அவர்களால் செய்ய முடிந்தது கொஞ்சமே என்பதால் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது என நினைக்கின்றனர் என்பதை நான் உணர்ந்தேன்."

"மக்கள் தங்களது சிறு சிறு பங்களிப்புகளின் உண்மையான சக்தியைப் பார்க்க உதவ" விரும்பினார் 46 வயது திருமதி பாப்லானி. "கனிவான சிறு சிறு செயல்களை ஒரே குறிக்கோளுடன் கூட்டாகச் செய்யும்போது பெரும் பலன்களை உண்டாக்க முடியும் என்பதை நான் செய்துகாட்ட விரும்பினேன்," என்றார் அவர்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், திருமதி பாப்லானி பிறந்து வளர்ந்த ஆடிப்பூர் நகரில், தொண்டூழியச் சேவை செய்ய அவருக்கு வாய்ப்புகள் அவ்வளவாகக் கிடைக்கவில்லை. அவரது வாழ்க்கையில் குடும்பத்தாரும் நெருங்கிய நண்பர்களுமே மையமாக இருந்தனர்.

பின்னர், அகமதாபாத்தில் உள்ள எல்.டி. கல்லூரியில் பொறியியல் படித்து, மும்பையிலும் குருகிராமிலும் வேலை செய்தார். அவரைவிட ஒரு வயது மூத்தவரான தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுநர் திராஜ் பாப்லானியை 2000 மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். இருவரும் 2006-ல் சிங்கப்பூரில் குடியேறினார்கள்.

"நாங்கள் இருவரும் போலாரிஸ் சாஃப்ட்வேர் லாப்ஸ் நிறுவனத்தில் (இப்போது வர்டுசா சிங்கப்பூர்) சேர்ந்தோம். பின்னர் ஜேபி மோர்கன் சேஸ், சிட்டிபேங்க், ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் என ஒவ்வொரு வங்கியாக மாறிச் சென்றோம்," என்றார் அவர்.

"நான் மேல்படிப்பு படித்திருந்தாலும் என் வாழ்க்கைமுறை இந்தியமயமாகவே இருந்தது.

"சிங்கப்பூர் அதிக உலகமயமான இடமாக இருந்ததால், எனக்குத் தெரியாத பலவற்றையும் நான் தெரிந்துகொள்ள வழிவகுத்தது.

"பணம் சம்பாதித்துவிட்டு ஈராண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்பிச் செல்வதே எங்களது ஆரம்பத் திட்டமாக இருந்தது. ஆனால், சிங்கப்பூர் மிகவும் வசதியாக இருந்ததால் இங்கேயே தங்கிவிட முடிவெடுத்தோம்.

"எல்லாம் நன்கு திட்டமிடப்பட்டிருக்கிறது - நீங்கள் எங்கே தங்கினாலும், நடந்து செல்லும் தூரத்தில் கடைத்தொகுதிகள் இருக்கின்றன. பொதுப் போக்குவரத்தும் அருமையாக இருக்கிறது. திரும்பும் பக்கமெல்லாம் தெளிவான வழிகாட்டிப் பலகைகள் உள்ளன. சமுதாயமும் வந்தாரை வரவேற்கிறது."

இப்போது 13 வயது டீ‌ஷா, 10 வயது யுவிகா என இரு மகள்களும் அங்கம் வகிக்கும் இந்தக் குடும்பம், ஆரம்பத்தில் இங்கு கால்பதிப்பதற்கு சக ஊழியர்களிடமிருந்து உதவி பெற்றது. படிப்படியாக "அருமையான நண்பர்கள் நிறைந்த சிறு குடும்பத்தைத் தேடிக்கொண்டோம்".

வாடகைக்கு வீடு எடுப்பதற்கான சிறந்த இடங்களைப் பற்றி சிங்கப்பூரரான சக ஊழியர் திரு ஸ்டான் லிம் அவர்களிடம் தெரிவித்தார். இந்தியப் பொருட்கள் கிடைக்கும் இடங்களையும் சிறந்த இந்திய உணவகங்களையும் பற்றி சக இந்திய ஊழியர்கள் தகவல் அளித்தனர்.

சிங்கப்பூர் சிந்தி சங்கம், சிங்கப்பூர் குஜராத்தி சங்கம் போன்ற இந்திய அமைப்புகளிலும் அவர்கள் சேர்ந்துகொண்டனர்.

"சிங்கப்பூரில் நாங்கள் கண்ட கலாசார ஒருங்கிணைப்பு எங்கள் மனதைக் கவர்ந்தது," என்றார் திருமதி பாப்லானி. "ஒவ்வொரு விழாவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. காலப்போக்கில் தாய்நாட்டை விட்டுவந்த ஏக்கமும் குறைந்தது. எங்களை அறியாமலேயே சிங்கப்பூர் எங்களது இல்லமானது."

திருமதி பாப்லானியின் கணவர் பணி நிமித்தம் 2018-ல் ஓர் ஆண்டு லண்டனுக்கு அனுப்பப்பட்டிருந்தபோது, அவர் தொண்டூழியம் புரியத் தீர்மானித்தார்.

"எனக்கு நிறைய நேரம் இருந்தது. அந்த நேரத்தில் அர்த்தமுள்ள எதையாவது செய்ய விரும்பினேன்," என்றார் அவர்.

"என் தாயுடன் வில்லிங் ஹார்ட்ஸ் அன்னதான மையத்திற்குச் (soup kitchen) சென்றேன். நாங்கள் சைவம் என்பதால் காய்கறிகள் வெட்டிக் கொடுத்தோம்.

"முற்றிலும் தொண்டூழியர்களால் நடத்தப்படும் இந்த அன்னதான மையம், ஒவ்வொரு நாளும் சுமார் 7,000 சாப்பாடுகளைச் சமைத்து, 70 இடங்களுக்கு விநியோகம் செய்கிறது. நான் திகைத்துப் போனேன்.

"அன்று நான் வீடு திரும்பியபோது, இந்தத் தொண்டூழியர்கள் உருவாக்கிக் கொண்டிருந்த நற்பலனை உணர்ந்தேன். நான் உணவுப் பொருட்களைச் சேகரித்து, வசதி குறைந்தவர்களுக்கு விநியோகம் செய்யப் போவதாக அப்போதே முடிவெடுத்தேன்."

ஆரம்பத்தில், திருமதி பாப்லானியும் சில நண்பர்கள் சேர்ந்து, எல்லா வகையான உணவுப் பொருட்களையும் அரிசி மூட்டைகளையும் நன்கொடையாளர்களிடமிருந்து சேகரித்தனர். ஆனால், அது சிரமமான உடலுழைப்புப் பணியாக இருந்தது. பொருட்களைச் சேகரித்து வைப்பதற்கு இடம் கிடைப்பதும் சிரமமாக இருந்தது.

எனவே, 2020 முதல், தொண்டூழியர்கள் நன்கொடையாளர்களிடமிருந்து நிதி சேகரித்து, இணையம்வழி அரிசியை ஆர்டர் செய்தனர். அவை, உதவி பெறும் அமைப்புகளுக்கு நேரடியாக விநியோகிக்கப்பட்டன.

"பெரும்பாலோரின் அடிப்படை உணவு சாதம் என்பதால், அரிசியைத் தேர்ந்தெடுத்தேன்," என்றார் திருமதி பாப்லானி. "அதுதவிர, அதைக் கையாளுவதும் எளிது.

"என் யோசனையையும் இலக்குகளையும் நண்பர்களோடும் தெரிந்தவர்களோடும் பகிர்ந்து கொண்டேன். அதே சிந்தனை உள்ளவர்கள் சேர்ந்து கொண்டனர். "My Kindness Ripple" இயக்கம் 45 தொண்டூழியர்களுடன் விரிவடைந்தது."

அவரது செயல்முறை எளிமையானது: தொண்டூழியத் தலைவர்கள் தங்களது தொடர்பு வட்டத்தில் உள்ளவர்களை தொலைபேசி வாயிலாகவும் சமூக ஊடகத்திலும் அணுகி, பங்களிக்குமாறு கோரிக்கை செய்வார்கள். பிறகு ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்கும் சமூகநல அமைப்புக்குப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.

திருமதி பாப்லானி திறமையான பெண் தொண்டூழியர்களை உருவாக்கி இருக்கிறார். "ஏனென்றால், பெண்கள் இயல்பாகவே அதிக கொடையுள்ளம் கொண்டவர்கள்."

"அவர்கள் எப்போதுமே உதவு புரிவதில் நாட்டம் உள்ளவர்கள்," என்றார் திருமதி பாப்லானி. அவர்களில் பெரும்பாலோர் வேலை செய்கிறார்கள். இருந்தாலும், எங்களது உணவு இயக்கத்திற்காக நிதி திரட்டுவதற்கு நேரம் செலவிடுகிறார்கள்."

2018-ல் இயக்கத்தின் 28 தொண்டூழியர்கள் 1,300 கிலோகிராம் உணவுப் பொருட்களைச் சேகரித்து, சிங்கப்பூர் உணவு வங்கிக்கு நன்கொடையாக வழங்கினர்.

2021-ல், ஆறு அமைப்புகளுக்கு 35,280 கிலோகிராம் அரிசியை நன்கொடையாக வழங்கி சிங்கப்பூர் உலகச் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்.

சென்ற ஆண்டு, 32,750 கிலோகிராம் அரிசி சேகரிக்கப்பட்டது. சன்லவ் இல்லம், ஸ்ரீ நாராயண மி‌ஷன், வில்லிங் ஹார்ட்ஸ், ஃபூட் ஃபிராம் த ஹார்ட், அன்னலக்‌ஷ்மி சமூக உணவுத் திட்டம், சுவாமி இல்லம், லயன்ஸ் முதியோர் இல்லம் ஆகியவற்றுக்கு அந்த அரிசி விநியோகிக்கப்பட்டது.

"நான் ஆரம்பத்திலிருந்து திரி‌ஷ்டியுடன் செயல்பட்டு வருகிறேன்," என்றார் இல்லத்தரசியும் "The Kindness Ripple" இயக்கத்தின் தொண்டூழியத் தலைவருமான ரூபாலி நாக்பால்.

"அவரது ஈடுபாடு, தன்னலமில்லா உள்ளம், திட்டத்தை வழிநடத்திய ஊக்கம் அனைத்தும் என்னைக் கவர்ந்தன. அவரோடும் மற்றவர்களோடும் தொடர்ந்து செயல்பட்டு, சமுதாயத்திற்குப் பங்களித்து ஒரு மாற்றத்தை உண்டாக்க முடியும் என நம்புகிறேன்."

தொழில்முனைவர் நீட்டு வாஸ்வானி, "திரி‌ஷ்டு அளித்த ஊக்கம், இந்த மேன்மையான செயலில் நானும் இணைய முடியும் என்ற நம்பிக்கையை எனக்களித்தது. அவரது தன்னடக்கமும் அனைவருக்கும் உதவும் மனப்பான்மையும் பாராட்டத்தக்கவை."

திருமதி பாப்லானியின் பணியை மவுண்ட்பேட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் பியாவ் சுவான் பாராட்டியிருக்கிறார்.

"நாம் அனைவருமே எல்லோருக்காகவும் சிறு சிறு கனிவான செயல்களைச் செய்யலாம். திருமதி பாப்லானி தொடங்கிய கனிவு இயக்கம், சிங்கப்பூரை அனைவருக்கும் மேம்பட்ட இடமாக உருமாற்றும்," என்றார் திரு லிம்.

"தொண்டூழியர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள்தான் சிங்கப்பூரைச் சிறப்பாக்குகிறீர்கள்.

"நல்ல காலமாக இருந்தாலும் கெட்ட காலமாக இருந்தாலும், பிறரரு வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை உண்டாக்குவதற்காக முன்வந்து செயல்பட விரும்புவதாகச் சொன்னவர்கள் நீங்கள்தான்."

திருமதி பாப்லானியும் அவரது குடும்பத்தாரும் இப்போது சிங்கப்பூர் சமுதாயத்தில் ஐக்கியமாகி, கலாசாரத்தையும் பாரம்பரியங்களையும் பின்பற்றுகின்றனர்.

"ஒவ்வொரு விழாவையும் எங்கள் நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்கிறோம்," என்றார் திருமதி பாப்லானி.

"எங்களுக்கு சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் மிகவும் பிடிக்கும். குறிப்பாக என் பிள்ளைகள் ஒவ்வோர் ஆண்டும் ஹாங்பாவ் அன்பளிப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.

"மிகவும் கேளிக்கையான லோ ஹெய்யும் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். மூன்கேக் நிலாப் பணியாரம், உள்ளூர் உணவு, குறிப்பாக பெரனக்கான் உணவு எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

திருமதி பாப்லானி 2015-ல் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றார்.

"சிங்கப்பூரின் எல்லா அம்சங்களும் எனக்குப் பிடிக்கும். குறிப்பாக, சிங்கப்பூரின் பல இனக் கலாசாரம், மற்ற பாரம்பரியங்களையும் பழக்கவழக்கங்களையும் ஏற்கும் தன்மை, எதிர்காலச் சிந்தனையுடன் திட்டமிடும் நடைமுறை, பாதுகாப்பு, அபாரமான உள்கட்டமைப்பு வசதிகள்," என்றார் அவர்.

"நான் இப்போது 100 விழுக்காடு சிங்கப்பூரர். இதுதான் என் இல்லம். இங்கு நான் பாதுகாப்பாகவும், இயல்பாகவும், நன்கு ஒருங்கிணைந்தும் இருக்கும் உணர்வு எனக்கு ஏற்படுகிறது. இந்தியாவுக்குத் திரும்பிச் செல்வேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை."

தொண்டூழியப் பணி சிங்கப்பூருக்குப் பெரிதும் உதவும் என்பதால் அதனை முக்கியமான ஒன்றாகக் கருதுகிறார் திருமதி பாப்லானி.

"சமுதாயத்தில் நம்மைச் சுற்றிலும் பிரச்சினைகள் இருந்தால், அதற்காகச் செயலில் இறங்கி, தீர்வுகாண உதவுவது நாமாக இருக்கவேண்டும்," என்றார் அவர்.

"நாம் செய்யும் சிறு சிறு பங்களிப்புகளும் பெரும் மாற்றத்தை உண்டாக்க முடியும். கனிவான சிறு சிறு செயல்களின் சக்தியை மக்கள் நம்புவதற்கு இது ஊக்கம் கொடுக்கும் என்று நம்புகிறேன்."

திருமதி பாப்லானி தனது அரிசி நன்கொடை இயக்கத்தை ஒவ்வோர் ஆண்டும் நடத்தவும், தனது குழுவில் அதிகமான தொண்டூழியர்களைச் சேர்க்கவும் முடியும் என நம்பிக்கை கொண்டிருக்கிறார்.