பிரித்தம் சிங் மேல்முறையீட்டு வழக்கு

சாட்சிகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி

2 mins read
16762179-c216-4d47-bb2b-6841426e53c9
பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் (நடுவில்) நவம்பர் 4ஆம் தேதி உயர் நீதிமன்றத்திற்கு வந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் நாடாளுமன்றக் குழுவிடம் பொய் சொன்னதற்காக அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில் உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்டீவன் சோங் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

பாட்டாளிக் கட்சி முன்னாள் எம்.பி. ரயீசா கானிடம் பொய்யை மறைக்க அறிவுறுத்தியதில் தம் பங்குக்குப் பொய் சொன்னதாகக் கூறப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரியில் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளரான திரு சிங்கிற்கு $14,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

விசாரணையின் தொடக்கத்தில், திரு சிங்கின் மேல்முறையீடு இரண்டு வாக்குமூலங்களை மையமாகக் கொண்டது என்று நீதிபதி சோங் கூறினார். முதலாவது, 2021 ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று தனது பொய்யைக் கடைசி வரை கட்டிக்காக்கும்படி திரு சிங் தன்னிடம் கூறியதாக திருவாட்டி கான் சாட்சியமளித்தார். ஆனால், திரு சிங் அதைத் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

இரண்டாவது வாக்குமூலம் 2021 அக்டோபர் 3ஆம் தேதியன்று நடந்த ஒரு கூட்டத்தில், “நான் உங்களைக் குறைசொல்ல மாட்டேன்,” என்று திருவாட்டி கானிடம் திரு சிங் சொன்னதாகக் கூறப்பட்டது. திரு சிங் அவ்வாறு சொன்னார் என்று அரசுத் தரப்பும் எதிர்த்தரப்பும் ஒப்புக்கொண்டாலும், அவர் என்ன சொல்ல வந்தார் என்பதில் அவர்கள் உடன்படவில்லை.

13ஆம் நாள் விசாரணையின்போது சாட்சியமளித்த திரு சிங் மற்றும் திருவாட்டி கானின் இரண்டு உதவியாளர்கள் உள்ளிட்ட சாட்சிகளின் நம்பகத்தன்மையும் மேல்முறையீட்டின் போது கேள்விக்குள்ளாக்கப்பட்டது. பாட்டாளிக் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் திரு லோ தியா கியாங்கும் ஒரு சாட்சியாக இருந்தார். இருப்பினும், விசாரணையில் அவரது சாட்சியத்துக்கு எதிராக அரசுத் தரப்பு முறையிடவில்லை.

திரு சிங்கின் வழக்கறிஞரான திரு ஆண்ட்ரே ஜுமாபோய், விசாரணை நீதிபதி, சிங்கைக் குற்றவாளியாக்குவதற்கான ‘முக்கியமான ஆதாரங்களை புறக்கணித்துவிட்டார்’ என்று நீதிபதி சோங்கை நம்ப வைக்க முற்படுவதாகக் கூறினார்.

ஒரு கட்டத்தில் திருவாட்டி கானின் ‘பொய்யைத் தெளிவுபடுத்த வேண்டும்’ என்பது திரு சிங்கின் நிலைப்பாடு என்று திரு ஜுமாபோய் கூறினார்.

2021 ஆகஸ்ட் 3ஆம் தேதி திருவாட்டி கான் நாடாளுமன்றத்தில் கூறிய ஒரு பொய்யை அவர் எவ்வாறு கையாண்டார் என்பது குறித்து நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழுவிடம் வேண்டுமென்றே பொய் சொன்னார் என்ற இரண்டு குற்றச்சாட்டுகளில் பிப்ரவரி 17 அன்று துணை முதன்மை மாவட்ட நீதிபதி லியுக் டான், திரு சிங் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார்.

நீதிபதி சோங்கிடம் வழங்கப்பட்ட 140 பக்க எழுத்துவழி சமர்ப்பிப்புகளில், கவனமற்ற முறையில் ஒன்றோடொன்று மேற்பொருந்தும் புகார்களை முன்வைத்து, அதன்மூலம் 61 காரணங்களை அடுக்கியுள்ளதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

“திரு சிங்கைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்த மாவட்ட நீதிபதி, ஒரு நுணுக்கமான விசாரணையை நடத்தி, சான்றுகளைத் துல்லியமாக மதிப்பீடு செய்து, சட்டத்தை சரியாகப் பயன்படுத்தினார்,” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்