குண்டர் கும்பல் முழக்கங்களைத் தாம் உரக்க கூறுவதைக் காணொளி எடுத்து அவற்றை டிக்டோக் தளத்தில் பதிவேற்றம் செய்த பெண்ணுக்கு அக்டோபர் 24ஆம் தேதியன்று ஒன்பது வாரச் சிறைத் தண்டனையும் $600 அபராதமும் விதிக்கப்பட்டன.
மெய்நிகர் பரிசுகள் மூலம் பணம் ஈட்டவும் பிறரது கவனத்தை ஈர்க்கவும் 22 வயது நூர் ஷியாஃபிக்கா அப்துல்லா அவ்வாறு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மோட்டார் சைக்கிளோட்ட உரிமம் இல்லாதபோதிலும் மோட்டார் சைக்கிளை வாடகைக்கு எடுத்து ஓட்டிய குற்றத்துக்காக அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் அனைத்து வகை வாகனங்களை ஓட்ட அவருக்கு ஈராண்டுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதே காலகட்டத்தில் அவர் வாகனங்கள் ஓட்டத் தேவையான உரிமங்களைப் பெற முடியாது.
குண்டர் கும்பல் உறுப்பினரைப் போல தம்மைக் காட்டிக்கொண்டதாக நூர் ஷியாஃபிக்கா மீது குற்றம் சாட்டப்பட்டது.
தம்மீது சுமத்தப்பட்ட இக்குற்றச்சாட்டை செப்டம்பர் 6ஆம் தேதியன்று அவர் ஒப்புக்கொண்டார்.
போக்குவரத்து தொடர்பான இரண்டு குற்றங்களையும் அவர் ஒப்புக்கொண்டார்.
தீர்ப்பளிக்கப்பட்டபோது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

