எல்லை தாண்டிய மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் ஏழு வட்டார அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட ஒரு மாதச் சோதனை நடவடிக்கைகளில் 1,800க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹாங்காங், தென்கொரியா, மலேசியா, மாலத்தீவுகள், தாய்லாந்து, மக்காவ் ஆகியவற்றின் அதிகாரிகளுடன் இணைந்து சிங்கப்பூரின் மோசடி ஒழிப்புப் பிரிவு ஏப்ரல் 28ஆம் தேதியிலிருந்து மே மாதம் 28ஆம் தேதி வரை சோதனை நடத்தியதாகச் சிங்கப்பூர்க் காவல்துறை புதன்கிழமை (ஜூன் 4) தெரிவித்தது.
அதில் சிங்கப்பூரில் 106 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 1,300க்கும் மேற்பட்ட மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் அதனால் $39.3 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும், 714 முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளிலிருந்து $7.69 மில்லியனுக்கும் அதிகமான தொகை பறிமுதல் செய்யப்பட்டது.
மோசடி, கணினி பொருள்களை அனுமதியின்றிப் பயன்படுத்தியது, போதைப் பொருள் வர்த்தகம், குற்றச் செயல்கள் மூலம் ஈட்டிய பொருள்களை வைத்திருந்தது, தேசிய மின்னிலக்க அடையாளச் சேவைகள் தொடர்பிலான கடவுச்சொற்களைச் சட்டவிரோதமாக வெளியிட்டது ஆகிய குற்றங்களுக்காக அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
ஒட்டுமொத்தச் சோதனை நடவடிக்கையில் மொத்தம் 33,900 பேர் பிடிபட்டனர். மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் அவர்கள் 14 வயதிற்கும் 81 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அரசாங்க அதிகாரிகளைப்போல் ஆள்மாறாட்டம் செய்தது, முதலீடு, இணையக் காதல், வேலைவாய்ப்பு, மின்வர்த்தகம் போன்றவை தொடர்பான மோசடிகள் என 9,200க்கும் அதிகமான மோசடிச் சம்பவங்களுடன் அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்டோர் $289 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.
“எல்லை தாண்டிய மிரட்டலை முறியடிக்க எல்லை தாண்டிய நடவடிக்கை தேவை. தனிப்பட்ட ஒரு நாடு அதைச் செய்யமுடியாது. அதற்குக் கூட்டு முயற்சி தேவை,” என்று அது சொன்னது.
தொடர்புடைய செய்திகள்
அதற்கென ஆப்பரேஷன் ஃபிரான்டியர் பிளஸ் (Operation Frontier+) என்ற திட்டம் அக்டோபர் 2024ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதில் சிங்கப்பூர், ஹாங்காங், மலேசியா, தாய்லாந்து, மாலத்தீவுகள், தென்கொரியா, ஆஸ்திரேலியா ஆகியவற்றின் மோசடி எதிர்ப்பு நிலையங்களின் பிரதிநிதிகள் செயல்பட்டனர்.
தடையற்ற தகவல் பறிமாற்றம் மூலமும் ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலமும் மோசடிகளைத் தடுப்பதற்கான அனைத்துலக ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
புதிய தளத்திற்குப் புதிய நாடுகளையும் வட்டாரங்களையும் வரவேற்பதன் மூலம் செயல்பாட்டை விரிவுபடுத்த அதிகாரிகள் முற்படுகின்றனர்.

