ஜோகூர் பாரு - சிங்கப்பூர் ஆர்டிஎஸ் (RTS) விரைவுரயில் இணைப்பில் செயல்படும் சிங்கப்பூர், மலேசிய அதிகாரிகளின் அதிகாரங்களை வரையறுக்கும் மசோதா ஒன்று, நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) சமர்ப்பிக்கப்பட்டது.
எல்லை தாண்டிய ரயில்வே (எல்லைக் கட்டுப்பாட்டு இணை அமைவிடம்) மசோதாவைச் சட்ட அமைச்சரும் உள்துறைக்கான இரண்டாவது அமைச்சருமான எட்வின் டோங் அறிமுகம் செய்திருந்தார்.
சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்திற்கும் ஜோகூர் பாருவிலுள்ள புக்கிட் சாகார் நிலையத்திற்கும் இடையே ஆர்டிஎஸ் இணைப்பு, ரயில் சேவையை வழங்குகிறது.
ரயில் பயண நேரம், கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒரு திசையில் 10,000 பயணிகள் வரை இச்சேவையைப் பயன்படுத்த முடியும்.
குடிநுழைவுச் சோதனையைப் பயணிகள் ஒரே ஒருமுறை மேற்கொண்டால் போதும் என்பது இந்த இணைப்பின் சிறப்பு.
இரண்டு நாடுகளின் சுங்கம், குடிநுழைவு, தனிமைப்படுத்தல் (CIQ) வசதிகளை ஆர்டிஎஸ் நிலையங்களின் வளாகத்தில் இவ்வாறு ஒரே இடத்தில் அமைக்க முடிகிறது.
எல்லை அனுமதி நடைமுறைகளை ஒரே இடத்தில் அமைத்தல், ரயில்வே பாதுகாப்பு மற்றும் எல்லை தாண்டிய சம்பவங்களை நிர்வகிப்பதில் ஒருங்கிணைப்பு, இருபக்கத் தரவுப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளைச் செயல்படுத்தப் புதிய மசோதா வகை செய்கிறது.
‘எல்லைகளுக்கு இடையிலான ரயில்வே (ஒரே இடத்தில் எல்லைப் பாதுகாப்பு) மசோதா’ என்பது அதன் பெயர்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் உள்ள சில பகுதிகளை ஆர்டிஎஸ் ரயில்சேவைக்காகக் ‘குறிப்பிட்டு ஒதுக்கப்பட்ட பகுதிகள்’ (Designated areas) என அடையாளப்படுத்துவதற்கான விதிமுறைகளை மசோதா அறிமுகம் செய்கிறது.
மலேசியாவின் சுங்கம், குடிநுழைவு, தனிமைப்படுத்தல் ஆகியவற்றுக்கான வட்டாரமாக அந்தப் பகுதி செயல்படும். அப்பகுதிக்கு மலேசியச் சட்டங்கள் பொருந்தும்.
அத்துடன், மலேசியாவிற்குச் செல்லும் பயணிகள், சரக்குகள் ஆகியவற்றுக்கான எல்லை அனுமதி, ரயில்வே பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொள்ள மலேசிய அதிகாரிகளுக்கு அங்கு அனுமதி அளிக்கப்படும்.
அந்த ‘குறிப்பிட்டு ஒதுக்கப்பட்ட பகுதி’ உட்லண்ட்ஸ் நார்த் (Woodlands North) நிலையத்தில் அமைந்திருக்கும். அதுபற்றிப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க, அதைச் சுற்றியுள்ள இடங்களில் தெளிவான அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கும்.
‘குறிப்பிட்டு ஒதுக்கப்பட்ட பகுதி’யில் சிங்கப்பூரின் சட்டங்களும் தொடர்ந்து அமலில் இருக்கும். சிங்கப்பூரால் அங்கீகரிக்கப்பட்ட மலேசியச் சோதனை அதிகாரிகள் மட்டுமே அங்குத் தங்கள் அதிகாரபூர்வ கடமைகளை ஆற்ற முடியும். சோதனை அதிகாரிகளைச் சிங்கப்பூரின் உள்துறை அமைச்சர் அங்கீகரிப்பதற்கான செயல்முறைகளை இந்த மசோதா விளக்குகிறது.
மேலும், அமைச்சர் எந்தவொரு காரணமும் தெரிவிக்காமல், குறிப்பிட்ட மலேசிய அதிகாரிகளுக்கு அங்கீகாரம் தர மறுக்கவோ தந்த அங்கீகாரத்தைத் திரும்பப் பெறவோ முடியும்.
இந்த ஒப்பந்தத்தின்கீழ், மலேசிய அதிகாரிகள் குடிநுழைவு, சுங்கம் மற்றும் தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான குறிப்பிட்ட அதிகாரங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
இவற்றில் பயண ஆவணங்களைச் சரிபார்ப்பது, பயணிகளைச் சோதிப்பது, மலேசியா செல்லும் பொருள்கள் அல்லது நபர்களின் நுழைவை மறுப்பது ஆகியவை அடங்கும்.
இருப்பினும் மலேசியச் சோதனை அதிகாரிகளுக்குச் சிங்கப்பூரில் யாரையும் கைது செய்ய அனுமதியில்லை. அவர்கள் ஏதேனும் ஒரு நபரையோ பொருளையோ தடுத்து வைத்தால், கூடிய விரைவில் அதன் பொறுப்பைச் சிங்கப்பூர் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதற்கு நிகராக, மலேசிய அதிகாரிகளுக்குச் சில சட்டப் பாதுகாப்புகளும் வழங்கப்படும். இந்த அதிகாரிகளைச் சிங்கப்பூர் அரசு ஊழியர்களாகச் சிங்கப்பூர்ச் சட்டம் கருதும்.
அவர்கள் சிங்கப்பூரில் தங்களது அதிகாரபூர்வ கடமைகளைச் செய்யும்போது அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள், சிங்கப்பூர்ச் சட்டங்களின்படி சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களாகவே கருதப்படும்.
இதேபோன்ற அதிகாரமும் பாதுகாப்பும் மலேசியாவின் புக்கிட் சாகார் (Bukit Chagar) நிலையத்தில் கடைமையாற்றும் சிங்கப்பூர் அதிகாரிகளுக்கும் வழங்கப்படும்.
மலேசியச் சட்டத்தின்படி கட்டுப்படுத்தப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட பொருள்கள் ஏதேனும் உள்ளனவா என்பதைக் கண்டறிய, வெளியேறும் எந்தவொரு பயணியிடமும் பாதுகாப்புச் சோதனைகளை நடத்த இந்த மசோதா சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும்.
அத்தகைய பொருள்கள் கண்டறியப்பட்டால், அந்தப் பொருள்கள் மனிதப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவையாகவோ, உயிருள்ள உயிரினமாகவோ ஒரு விசாரணையுடன் தொடர்புடைய ஆதாரமாகவோ இல்லாதபட்சத்தில், அவற்றை அந்தப் பயணியே தாமாக முன்வந்து அப்புறப்படுத்தச் சிங்கப்பூர் அதிகாரிகள் அனுமதிக்க இடமுண்டு.

