சிங் மிங் பண்டிகையின்போது இடுகாடுகளிலும் அஸ்தி மாடங்களிலும் கூட்ட நெரிசல் எதிர்பார்க்கப்படுகிறது

சிங் மிங் பண்டிகையின்போது இடுகாடுகளிலும் அஸ்தி மாடங்களிலும் கூட்ட நெரிசல் எதிர்பார்க்கப்படுகிறது

2 mins read
dabe44a1-bde4-488d-8fbb-bf47822f6730
மார்ச் 21ஆம் தேதிக்கும் ஏப்ரல் 19ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், இடிபாடுகளிலும் அஸ்தி மாடங்களிலும் அதிக மக்கள் கூட்டம் திரளும் சாத்தியமுள்ள 11 முக்கிய நாள்களை அது அடையாளம் கண்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங் மிங் பண்டிகையை முன்னிட்டு, இடுகாடுகளிலும் அஸ்தி மாடங்களிலும் முன்னோருக்கு மரியாதை செலுத்த வருவோர் கூட்டத்தை அலைமோதும் என எதிர்பார்க்கலாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.

மார்ச் 21ஆம் தேதிக்கும் ஏப்ரல் 19ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், அதிக மக்கள் கூட்டம் திரளும் சாத்தியமுள்ள 11 முக்கிய நாள்களை அது அடையாளம் கண்டுள்ளது.

நோன்புப் பெருநாள் (மார்ச் 21), புனித வெள்ளி (ஏப்ரல் 3), சிங் மிங் பண்டிகை தினம் (ஏப்ரல் 5) ஆகிய நாள்களிலும் இக்காலகட்டங்களில் வரும் வார இறுதி நாள்களிலும் அவ்விடங்களைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதன்கிழமையன்று (பிப்ரவரி 25) வெளியிடப்பட்ட அறிக்கையில், சுவா சூ காங் இடுகாடு, சுவா சூ காங் அஸ்தி மாடம், மண்டாய் அஸ்தி மாடம் மற்றும் ஈசூன் அஸ்தி மாடம் ஆகியவற்றிற்குச் செல்வோர் கூட்ட நெரிசல் மிக்க நாள்களைத் தவிர்த்து மற்ற நாள்களில் வருமாறு வாரியம் கேட்டுக்கொண்டது.

அதிகரிக்கும் தேவையை முன்னிட்டு, மார்ச் 21 முதல் ஏப்ரல் 19 வரை மேற்கூறிய மூன்று அஸ்தி மாடங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவா சூ காங் இடுகாட்டில் உள்ள ‘அமைதித் தோட்டம்’ மற்றும் மண்டாய் நார்த் தகனச் சாலைக்கு அருகிலுள்ள ‘அமைதித் தோட்டம்’ ஆகிய இடங்கள், கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் என அடையாளம் காணப்பட்டுள்ள 11 நாள்களில் பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும்.

முன்கூட்டியே அனுமதி பெற்று, அந்த நாள்களில் அஸ்தியைத் தூவ வருபவர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுவா சூ காங் அஸ்தி மாடத்தில், அங்கு தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் காரணமாக வேலி அடைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குள் நுழைய வேண்டாம் என்று அங்கு செல்பவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கூடுதல் விவரங்களுக்குப் பொதுமக்கள் go.gov.sg/qm2026 எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்