பீஷான் வட்டாரத்தைத் தொடர்ந்து ஹாவ்காங் வட்டாரத்திலும் காகங்களின் தொல்லை குறித்து அவ்வட்டாரக் குடியிருப்பாளர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.
புளோக் 524 ஹாவ்காங் அவென்யு 8க்கு அருகே 38 வயது பெண் ஒருவரை காகம் தாக்கியது. நேற்று (பிப்ரவரி 17) காலை 7.20 மணியளவில் அவர் தாக்கப்பட்டதாக சாவ்பாவ் சீன நாளிதழ் தெரிவித்தது.
அந்த இடத்ததில் காகங்களை பிடிக்க வலை அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த வட்டாரத்தில் அதிக அளவில் காகங்கள் இருப்பதாக குடியிருப்பாளர்கள் கூறினர்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் வலை அமைக்கப்பட்டபோது, பல காகங்கள் அதில் சிக்கியதாகவும், அண்மையில் அந்த வலையில் காகங்கள் சிக்குவதில்லை என்றும் குடியிருப்பாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
இந்த வட்டாரத்தில் அதிக அளவில் காகங்கள் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
2020ஆம் ஆண்டு காகங்கள் குறித்து 2,750 புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக தேசிய பூங்கா வாரியம் தெரிவித்தது. காகங்களின் கரையும் சத்தம், மனிதர்களை தாக்கும் சம்பவங்கள், பொதுமக்கள் காகங்களுக்கு உணவு அளிப்பது போன்ற புகார்கள் அதில் அடங்கும்.