கச்சா எண்ணெய் விலை சரிவு

தாக்குதல் நிறுத்தம் குறித்த டிரம்ப்பின் அண்மை அறிவிப்பின் எதிரொலி

கச்சா எண்ணெய் விலை சரிவு

1 mins read
67d59485-de21-4f13-be18-503e6374a2ce
மார்ச் மாதத்தில் மட்டும் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 45 விழுக்காடுவரை உயர்ந்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஈரானிய எரிசக்திக் கட்டமைப்புமீது தாக்குதல் நடத்துவதற்கான அவகாசத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நீட்டித்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (மார்ச் 27) அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தது.

இது சந்தைக்குத் தற்காலிக நிவாரணத்தை அளித்தாலும் ஏப்ரல் மாதம்வரை போரின் போக்குக் குறித்த நிச்சயமற்றதன்மையை நீட்டித்துள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை மணி 8:18க்கு, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1.7 விழுக்காடு சரிந்து பீப்பாய்க்கு 106.20 அமெரிக்க டாலராக இருந்தது.

மார்ச் 26ஆம் தேதி, அதன் விலை 5.7 விழுக்காடு உயர்ந்திருந்தது.

அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் விலை 1.5 விழுக்காடு சரிந்து பீப்பாய்க்கு 93.10 அமெரிக்க டாலரானது.

இந்த எண்ணெய் விலை முந்திய நாள் கிட்டத்தட்ட ஐந்து விழுக்காடு அதிகரித்திருந்தது.

இது குறித்து ஐஎன்ஜி குரூப் நிறுவனத்தின் அதிகாரி இவா மாந்தே கூறுகையில், “டிரம்ப்பின் தாக்குதல் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்த அறிவிப்பு சந்தையில் நிலவும் உடனடிப் பதற்றத்தைத் தணிக்கிறது. இருப்பினும், ஆபத்து இன்னும் நீங்கவில்லை,” என்றார்.

மேலும், “தற்போது நாளொன்றுக்குக் கிட்டத்தட்ட 8 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி முடங்கியுள்ளதாலும் பாரசீக வளைகுடா வழியாகச் செல்லும் பெருமளவிலான எண்ணெய்ப் போக்குவரத்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாலும் புவிசார் அரசியல் காரணங்களால் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு தற்போதைக்குக் குறைய வாய்ப்பில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்