அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை காரணமாக, கச்சா எண்ணெய் விலை 2 விழுக்காடு அதிகரித்து, பீப்பாய்க்கு 107 அமெரிக்க டாலருக்குமேல் உயர்ந்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் உலகளாவிய நிலையில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நேரப்படி திங்கட்கிழமை (ஏப்ரல் 27) காலை 7.45 மணியளவில், கச்சா எண்ணெய் அளவுகோலான ‘பிரென்ட்’ எண்ணெய் விலை 2.05 விழுக்காடு உயர்ந்து பீப்பாய்க்கு 107.49 அமெரிக்க டாலராகப் பதிவானது. அமெரிக்காவின் ‘வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியட்’ எண்ணெய் விலை 1.9 விழுக்காடு உயர்ந்து 96.17 அமெரிக்க டாலருக்கு விற்கப்படுகிறது.
சென்ற வாரம் அவற்றின் விலை முறையே 17, 13 விழுக்காடு ஏற்றம் கண்டது. ஈரான் போர் தொடங்கியதிலிருந்து ஒரு வார காலகட்டத்தில் ஆக அதிக விலையேற்றம் அது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தமது பேராளர்களின் பாகிஸ்தான் பயணத்தை நிறுத்தியதை அடுத்து அமைதிப் பேச்சு மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கை சென்ற வாரயிறுதியில் பின்னடைவைச் சந்தித்தது.
இவ்வேளையில், எண்ணெய்ச் சேமிப்புக்கான இடவசதி தீர்ந்துபோனால் ஈரான் அதன் எண்ணெய் உற்பத்தியை நிறுத்த நேரிடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
மத்திய கிழக்கில் நிலவும் இத்தகைய சூழல் காரணமாக, கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற நிதி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

