சிங்கப்பூரிலிருந்து புறப்படும் ஜென்டிங் டிரீம், ஸ்டார் நேவிகேட்டர் அல்லது ஸ்டார் வாயேஜர் ஆகிய சுற்றுலாக் கப்பல்களுக்கு எரிபொருள் வரி நீக்கப்படுகிறது. இது வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) முதல் நடப்புக்கு வருகிறது.
“சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து புறப்படும் பயணிகளுக்கான எரிபொருள் வரி முற்றிலும் அகற்றப்படுகிறது,” என்று சுற்றுலாக் கப்பல்களை இயக்கும் ஸ்டார்டிரீம் குரூசஸ் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
அதேபோல் தைவான், ஹாங்காங் ஆகிய பகுதிகளிலிருந்து பயணம் செய்பவர்களுக்கு எரிபொருள் வரி 50 விழுக்காடு குறைக்கப்படுகிறது.
மத்திய கிழக்கு வட்டாரத்தில் போர் வெடித்ததால் மார்ச் மாதம் முதல் சில சுற்றுலாக் கப்பல்களில் எரிபொருள் வரி அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் சிங்கப்பூர், மலேசியப் பயணிகள் பயணம் செய்யும் ஒவ்வொரு நாளுக்கும் கூடுதலாக 15 வெள்ளி செலுத்த வேண்டும்.
அதேபோல் ஹாங்காங்கிலிருந்து புறப்படும் ஸ்டார் வாயேஜர் 30 வெள்ளியும் தைவானிலிருந்து புறப்படும் ஸ்டார் நேவிகேட்டர் 25 வெள்ளியும் பயணிகளிடமிருந்து வசூலித்து வந்தன.
தற்போது மத்திய கிழக்கில் நிலைமை சீராகி வருவதால் எரிபொருள் விநியோகம் கொஞ்சம் கொஞ்சமாக வழக்க நிலைக்குத் திரும்பி வருவதால் வரியைக் குறைத்தும் நீக்கியும் உள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்தன.

