மின்னிலக்க நாணயம் தொடர்பிலான மோசடிச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மூவர் சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் தலைமை நிர்வாகிகளாகப் பணியாற்றிய இருவரும் அடங்குவர். அவர்கள் கலிஃபோர்னியா மாநிலத்தின் ஓக்லாந்து நகரில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் மின்னிலக்க நாணய மோசடிச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வர்.
வோர்ட்டெக்ஸ் எனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கிளெப் கோரா, 24, இந்தியாவைச் சேர்ந்த மனு சிங், 34, மற்றும் வாசு சர்மா, 26, ஆகியோர் அமெரிக்காவால் அடையாளம் காணப்பட்டுள்ள அந்த சந்தேக நபர்கள்.
மனு, கொன்ட்ரேரியன் எனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றினார். அதே நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றியவர் வாசு.
அமெரிக்க அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க மூவரும் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி கைதுசெய்யப்பட்டனர். அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்ட பிறகு அவர்கள் முதன்முறையாக கடந்த திங்கட்கிழமை (மார்ச் 30) ஓக்லாந்தில் நீதிபதியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அந்த மூன்று வெளிநாட்டவரும் அமெரிக்காவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், சந்தை நிலவரத்தைத் தவறாக வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் அடங்குவர். அந்த 10 பேரும் நான்கு மின்னிலக்க நாணய நிதிச் சேவை நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகள் அல்லது ஊழியர்களாகப் பணியாற்றியவர்கள்.

