சிங்கப்பூரில் கடந்த ஆண்டு மோசடியால் $1.1 பில்லியன் இழப்பு ஏற்பட்ட நிலையில், அதில் கிட்டத்தட்ட கால் பங்கு மின்னிலக்க நாணயத்துடன் தொடர்புடையது.
பாதிக்கப்பட்டோரில் ஒருவர், நச்சுநிரலால் இயக்கப்பட்ட மோசடியால் $125 மில்லியனை இழந்தார்.
காணொளி நேர்காணலுக்கான இணைப்பை அந்த ஆடவர் சொடுக்கிய பிறகு, தமது மடிக்கணினியில் நிரல் ஒன்றை இயக்கும்படி மோசடிக்காரர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டார். இறுதியில், அந்த நிரல் அவரது மின்னிலக்க நாணயக் கணக்கைக் குறிவைத்த நச்சுநிரல் என்பது தெரியவந்தது.
தமது அதிகாரத்தைப் பெறாத பணப் பரிவர்த்தனைகளைப் பார்த்த பிறகு தாம் ஏமாற்றப்பட்டதாக ஆடவருக்குத் தெரியவந்தது.
மொத்த மோசடிகளில் ஏறத்தாழ 24.3 விழுக்காடு மோசடிகள், மின்னிலக்க நாணயம் தொடர்பானவை என்றது காவல்துறை. இது, கடந்த ஆண்டு பதிவான 6.8 விழுக்காட்டைக் காட்டிலும் மிக அதிகம்.
வருடாந்தர மோசடி மற்றும் இணையக்குற்றப் புள்ளிவிவரங்களை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) வெளியிட்ட காவல்துறை, 2024ல் நான்கு சம்பவங்களில் மட்டும் 237.9 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தது.
அந்த நான்கு சம்பவங்களில் மூன்று மின்னிலக்க நாணயத்துடன் தொடர்புடையவை.
பாதிக்கப்பட்டோரில் ஒருவர் மட்டுமே 33.8 மில்லியன் வெள்ளியை இழந்தார். இது, 2024ல் நடந்த 8,552 மின்னஞ்சல் மோசடிச் சம்பவங்களில் ஏற்பட்ட 59.4 மில்லியன் இழப்பில் பாதிக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
மிகுந்த லாபத்தைத் தருவதாக உறுதியளித்த விளம்பரம் ஒன்றால் அந்நபர் ஈர்க்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
அந்த விளம்பரம், இறுதியில் மின்னஞ்சல் மோசடி எனத் தெரியவந்தது.
பாதிக்கப்பட்டவர், அந்த மோசடித் தளத்தில் உள்ள ‘கியூஆர்’ குறியீடு ஒன்றை வருடி, மின்படிவம் ஒன்றில் தமது மின்னிலக்க நாணயக் கணக்கு விவரங்களை நிரப்பினார்.
இதுபோல, மின்னிலக்க நாணய மோசடியால் பாதிக்கப்பட்ட ஒருவர், சமூக ஊடகத்தில் ஆள்மாறாட்டம் செய்த ஒருவரது மோசடிக்கு இலக்கானார்.
பாதிக்கப்பட்டவர், தமக்குத் தெரிந்த நிறுவன இயக்குநர் ஒருவருடன் உரையாடுவதாக எண்ணி, பெரிய தொகைகளை அவருக்கு மாற்றிவிட்டார். அதனால் அவர் 21 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையை இழக்க நேரிட்டது.
மேற்கூறப்பட்டவரது இழப்பு, 2024ல் நடந்த சமூக ஊடக ஆள்மாறாட்ட மோசடிகளால் ஏற்பட்ட 26.4 மில்லியன் வெள்ளி, இழப்பில் பெரும்பங்கு வகிக்கிறது.
இந்நிலையில், பொது இடங்களில் மின்னிலக்க நாணயச் சேவைகளைச் சந்தைப்படுத்துவதையும் விளம்பரப்படுத்துவதையும் கட்டுப்படுத்தியுள்ளதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. அத்துடன், பயனீட்டாளர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.