சிங்கப்பூர் சொத்துச் சந்தையில் முன்னணி வகிக்கும் மாபெரும் நிறுவனமான சிட்டி டெவலப்மெண்ட்ஸ் லிமிடெட் (சிடிஎல்), முதிர்ச்சியடைந்த, முக்கியமற்ற சொத்துகளில் முடங்கியுள்ள $6 பில்லியன் தொகையை விடுவித்து, அந்த மூலதனத்தை நிறுவனத்தின் வளர்ச்சிக் காரியங்களுக்காக மீண்டும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
மேலும், அடுத்த மூன்று நிதியாண்டுகளுக்கு, வரி உள்ளிட்டவை கழித்தது போக அறிக்கையிடப்படும் லாபத்தில் 35 விழுக்காட்டிற்கும் அதிகமான தொகையை ஆண்டின் லாப ஈவாக வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
திங்கட்கிழமை (செப்டம்பர் 28) வெளியிடப்பட்ட பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்திபூர்வ மறுஆய்வில், சொத்துகளை விற்பனை செய்வதன் மூலமாகவோ, அதனை மேம்படுத்துவதன் மூலமாகவோ ஏறக்குறைய $6 பில்லியன் மதிப்பிலான சொத்துகளை விடுவிக்க முடியும் என்று சிடிஎல் தெரிவித்துள்ளது.
இது, நீண்டகால அடிப்படையில் பங்குதாரர்களின் மதிப்பை உயர்த்தவும் நிறுவனம் மேற்கொண்டுள்ள புதுப்பிக்கப்பட்ட உத்தியின் ஒரு பகுதியாகும்.
அதன்படி ஆண்டறிக்கையில் குறிப்பிடப்படும் நிகர லாபத்தில் குறைந்தது 35 விழுக்காடு லாப ஈவு வழங்கப்படும்.
2029 நிதியாண்டுக்குள் நிகரக் கடன் விகிதம் ஏறக்குறைய 55 விழுக்காடாகக் குறைக்கப்படும்.
சொத்து விற்பனையின் லாபத்திலிருந்து S$1 பில்லியனுக்கும் அதிகமாக நிகர லாபம் ஈட்டப்படும்.
இதனால் நிர்வாகத்தின் கீழுள்ள சொத்துகளின் மதிப்பு S$10 பில்லியனை எட்டும்.
புதிய முதலீடுகளுக்குச் சிங்கப்பூரே முதன்மைச் சந்தையாகத் தொடர்ந்து நீடிக்கும் என்று சிடிஎல் குறிப்பிட்டுள்ளது.
திட்டமிடப்பட்டுள்ள S$5 பில்லியன் வளர்ச்சி மூலதனத்தில் 60 விழுக்காடு சிங்கப்பூருக்கும், 30 விழுக்காடு சீனா, ஜப்பானுக்கும் எஞ்சியுள்ள 10 விழுக்காடு இதர சந்தைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
குடியிருப்புகள், வர்த்தகம், விருந்தோம்பல், வாழ்விடம் ஆகிய நான்கு துறைகளில் இந்த முதலீடுகள் செய்யப்படும்.
சிடிஎல் இலக்கு வைத்துள்ள சொத்து விற்பனையில் 45 விழுக்காடு வர்த்தகச் சொத்துகளாகவும், 30 விழுக்காடு விருந்தோம்பல் சார்ந்த சொத்துகளாகவும் இருக்கும்.
பழைய குடியிருப்பு, பிற சொத்துகள் 20 விழுக்காடாகவும் மீதமுள்ள 5 விழுக்காடு வாழ்விடப் பிரிவிலிருந்தும் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
