சொத்துச் சந்தை நிறுவனமான சிட்டி டெவலப்மென்ட்ஸ் லிமிடெட் (CDL), சென்ற ஆண்டு (2025) அதன் நிகர லாபம் மும்மடங்கு அதிகரித்ததாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) தெரிவித்துள்ளது.
அந்த அறிவிப்பை அடுத்து அதன் பங்குகளின் விலை கிட்டத்தட்ட 4 விழுக்காடு கூடியது.
நிகர லாபம் அதிகரித்ததற்குச் சென்ற ஆண்டு சிங்கப்பூரில் குடியிருப்புக் கட்டடங்களின் விற்பனை வலுவாக இருந்ததும் 2025 பிற்பாதியில் ‘சவுத் பீச்’ மேம்பாட்டுத் திட்டத்தின் 50.1 விழுக்காட்டுப் பங்குகளை விற்று, அத்திட்டத்திலிருந்து முதலீட்டை நீக்கிக்கொண்டதும் காரணங்களாகத் தெரிவிக்கப்பட்டது.
‘சவுத் பீச்’ மேம்பாட்டுத் திட்டத்தின் மதிப்பு $2.67 பில்லியன். அதிலிருந்து முதலீடுகளை நீக்கிக்கொண்டதன் மூலம் சிடிஎல் குழுமம் $473.1 மில்லியன் லாபம் ஈட்ட முடிந்ததாகக் கூறியது.
இதேபோல் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த திட்டங்களிலிருந்து விலகிக்கொண்டதன் வாயிலாக அது ஏறக்குறைய $2 பில்லியன் லாபம் ஈட்ட முடிந்ததாகத் தெரிகிறது.
சென்ற ஆண்டுப் பிற்பாதியில், சிடிஎல் குழுமத்தின் நிகர லாபம் 374 விழுக்காடு அதிகரித்து $538.5 மில்லியனாகப் பதிவானது. அதற்கு முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்தில் நிகர லாபம் $113.5 மில்லியனாக இருந்தது.
2025ன் பிற்பாதி நிகர லாபம் அதிகரித்ததால், ஆண்டு முழுவதற்குமான வருவாய் 213 விழுக்காடு அதிகரித்து $629.7 மில்லியனானது. ஒப்புநோக்க, 2024ஆம் ஆண்டு முழுவதற்குமான வருவாய் $201.3 மில்லியன்.
வெள்ளிக்கிழமை காலை 9.33 மணி நிலவரப்படி, குழுமப் பங்குகளின் விலை $9.73ஆக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
குழுமத்தின் 2025ஆம் ஆண்டு முற்பாதிக்கான வருவாய் 11.1 விழுக்காடு வளர்ச்சி கண்டு $1.19 பில்லியனாகப் பதிவானது. 2025 முழுவதற்குமான வருவாய் 9.7 விழுக்காடு அதிகரித்து $3.59 பில்லியனானது. சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட சொத்து மேம்பாட்டுத் திட்டங்கள் இந்த வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களித்தன.
இந்நிலையில், குழுமப் பங்குதாரர்களுக்கு லாப ஈவுத்தொகையாக மே 19ஆம் தேதி, ஒரு பங்கிற்கு 25 காசு வழங்கலாமென அதன் இயக்குநர் வாரியம் பரிந்துரைத்துள்ளது.

