இன்றைய உலகளாவிய வேலையிடத்தில் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு ஒரு தனித்துவமான போட்டித்தன்மை அனுகூலம் உள்ளது. அது கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளின் வேலைக் கலாசாரங்களின் பலங்களை அடிப்படையாகக் கொண்டது என்கிறார் மிசுஹோ சிங்கப்பூரின் முதல் பெண் தலைமை நிர்வாகியான ஜோசஃபின் லோக்.
அந்த ஜப்பானிய வங்கியில் அவர் பணியாற்றிய கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில், நீண்ட கால அர்ப்பணிப்பின் மதிப்பை அவர் கற்றுக்கொண்டிருக்கிறார். “ஜப்பானிய நிறுவனங்கள் முடிவுகளை எடுக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒருமுறை அவர்கள் அர்ப்பணிப்புடன் இருந்தால், முழுமூச்சாகச் செயல்படுவார்கள்,” என்கிறார் திருவாட்டி லோக். அதாவது, குறுகிய கால ஆதாயங்களை விட நீண்டகால உறவுகளுக்கு அவர்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள்.
முடிவுகளை எடுப்பதற்கு முன் ஒருங்கிணைந்த, ஒருமித்த கருத்தை ஆதரிப்பதும், தனிப்பட்ட புகழைவிட குழுவின் சாதனைகளுக்கு மதிப்பளிப்பதும் ஜப்பானிய வேலையிடக் கலாசாரம்தான் என்று அந்த சிங்கப்பூரர் மேலும் கூறுகிறார்.
மேற்கத்திய பணியிடக் கலாசாரத்துடன் ஒப்பிடுகையில், வேகம், தனிப்பட்ட பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படையான உரையாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் தலைமைப்பண்பு என்பது பெரும்பாலும் தனிப்பட்ட வெளிப்படைத்தன்மை மற்றும் வசீகரத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
இந்த வேறுபாடுதான் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு ஒரு சாதகமான போக்கை அளிக்கிறது என்கிறார் லோக். இது, பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளுடன் தொடர்புடைய வேகம், சுறுசுறுப்பு, செயலாக்கம் ஆகியவற்றை மரியாதை, நம்பிக்கை, ஒருமித்த கருத்தை உருவாக்குதல் போன்ற ஆசிய விழுமியங்களுடன் இணைக்கிறது.
“சிங்கப்பூரர்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. எங்களிடம் ஆசிய வேர்களும் மேற்கத்திய செயல்திறனும் உள்ளன,” என்று 50 வயதான அவர், இது தங்களை ஒரு சிறந்த கலாசார மற்றும் வர்த்தகப் பாலமாகச் செயல்பட உதவுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
“வேகத்தையும் நுட்பமான உணர்வையும் சமநிலைப்படுத்தும் எங்கள் திறன் ஒரு தனித்துவமான போட்டித்தன்மையாகும். நான் சிங்கப்பூர் மற்றும் ஜப்பானின் சிறந்த அம்சங்களை எடுத்து அவற்றை ஒன்றிணைக்க விரும்புகிறேன். அது மிஸுஹோ சிங்கப்பூரை மிகவும் வலிமையாக்கும் என்று நான் நினைக்கிறேன்,” என்றார் அவர்.

