துணை அமைச்சர் கைகுலுக்கல் சர்ச்சை: காணொளி வெளியிட்டது கலாசாரக் குழு

2 mins read
9ee11161-a4ef-454f-b1dc-beab165239c6
சிவப்புச் சட்டை அணிந்தவரிடம் தாமதமாகக் கைகுலுக்கியதாக சர்ச்சை எழுந்தது. - படம்: கலாசாரக் குழுவின் காணொளி

வெளியுறவு மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் கைகுலுக்குவது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்குப் பதிலளிக்கும் விதமாக நிகழ்ச்சியை நடத்திய கலாசாரக் குழு, காணொளி ஒன்றை வெளியிட்டு உள்ளது.

பீஷானில் உள்ள ‘குவோங் வாய் சியூ பெக் சான் தெங்’ என்னும் 155 ஆண்டு கால பழைமை வாய்ந்த கலாசாரக் குழுவை 16 கேன்டனிஸ் குலவழிச் சங்கங்கள் நிர்வகிக்கின்றன.

பீஷான் லேனில் உள்ள பெக் சான் தெங் கட்டடத்தில் கடந்த மே 17ஆம் தேதி கென்டனிஸ் கலாசாரத் திருவிழா நடத்தப்பட்டது. அவ்விழாவுக்கு திருவாட்டி கான் சியாவ் ஹுவாங் அழைக்கப்பட்டு இருந்தார்.

அவரை வரவேற்க குழுவின் பிரதிநிதிகள் காத்திருந்தனர்.

காரில் வந்து இறங்கியபோது துணை அமைச்சரை நோக்கி குழுவினர் வந்தபோது, அவர் தமது வலது கையில் கைப்பேசி ஒன்றை வைத்திருந்ததையும் பின்னர் அதனை தமது கால்சட்டையின் பின்னால் உள்ள பையில் வைத்ததையும் காணொளி காட்டியது.

சிங்க நடனக் குழு ஒன்றின் 72 வயது உறுப்பினரான லியோங் சீ லெங், திருவாட்டி கானிடம் கைகுலுக்க தமது கையை நீட்டினார். அப்போது கலாசார விழாவின் ஏற்பாட்டுக் குழு தலைவரான எட்வர் லியோங்கும் திருவாட்டி கானை நோக்கிச் சென்றார்.

முதலில் திரு எட்வர்டிடம் கைகுலுக்கிய பின்னர் திரு லியோங்கின் கையைக் குலுக்கினார் அவர். தொடர்ந்து, கார்நிறுத்தும் இடத்தில் குழுமி இருந்த மற்றவர்களை நோக்கிச் சென்ற திருவாட்டி கான், அவர்களிடமும் கைகுலுக்கி வரவேற்பை ஏற்றார்.

இந்தக் காட்சிகள் அடங்கிய காணொளி வெள்ளிக்கிழமை (ஜூன் 13) பெக் சான் தெங் கலாசார நிலையத்தில் செய்தியாளர்களிடம் காண்பிக்கப்பட்டது.

முன்னதாக, சிவப்புச் சட்டை அணிந்திருந்த திரு லியோங்கிடம் தாமதமாகக் கைகுலுக்கியதாக சர்ச்சை எழுந்தது. அது தொடர்பான காணொளி ஒன்றை சிங்க நடனக் குழுவைச் சேர்ந்த சமூக ஊடகங்களில் பதிவேற்றினர்.

திருவாட்டி கான் ஆணவத்துடன் நடந்துகொண்டதாக இணையவாசிகள் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

அதனைக் கண்ட பின்னர் ஜூன் 8ஆம் தேதி மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் மேரி மவுண்ட் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருவாட்டி கான்.

“காரிலிருந்து இறங்கியதும், விழா ஏற்பாட்டாளரை அடையாளம் காண முயன்றேன். முதலில் அவரது கையைக் குலுக்கினேன். என்னை வரவேற்க, ஒரே நேரத்தில் பலர் திரண்டனர். சிவப்புச் சட்டை அணிந்த ஆடவருடன் கைகுலுக்க சற்று தாமதமாகிவிட்டது. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் தெரிவித்து இருந்தார்.

குறிப்புச் சொற்கள்